சென்னை: சிகரெட் பிடித்தால் நுரையீரல் புற்றுநோய் வரும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சிகரெட் பிடிப்பது தாம்பத்திய வாழ்க்கைக்கு கூட பிரச்சனையாக மாறும் என்பது பலருக்கும் தெரியாமல் உள்ளது. ஆம், சிகரெட், பீடி புகைப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் வீரியம் குறைந்து குழந்தை பாக்கியத்துக்கு தடை போடலாம் என்று எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்.
‛புகைப்பழக்கம் புற்றுநோயை உண்டாக்கும்.. உயிரை கொல்லும்''.. இதுபற்றி நன்கு அறிந்தே பலரும் பீடி, சிகரெட்டை புகைத்து வருகின்றனர். இவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம். அதேபோல் வாய்ப்புற்றுநோய் உள்பட பிற வகையிலான புற்றுநோயாலும் புகைப்பிடிப்பவர்கள் பாதிக்கப்படலாம்.

சரி, புகைப்பிடிப்பதால் இதுதான் பிரச்சனையா? என்று கேட்டால். இல்லை. இன்னும் பல பிரச்சனைகள் வரும் என்கின்றனர் டாக்டர்கள். உதாரணமாக வீட்டில் ஒருவர் புகைப்பிடிப்பதால் மனைவி, குழந்தைகள், பெற்றோர் உள்ளிட்டவர்களும் பாதிக்கப்படலாம். இதுதவிர பலருக்கும் தெரியாத விஷயம் உள்ளது.
அதுதான் விந்தணு குறைபாடு. அதாவது தொடர்ந்து புகைப்பிடிப்பது என்பது விந்தணுக்களின் வீரியம் மற்றும் எண்ணிக்கையை குறைத்து விடுமாம். Azoospermia, Oligospermia உள்ளிட்ட பாதிப்புகளை புகைப்பழக்கம் தரும் என்கின்றனர் டாக்டர்கள். இதில் அஸோஸ்பெர்மியா என்பது விந்தணுக்கள் இல்லாதததை குறிக்கும். ஒலிகோஸ்பெர்மியா என்பது குறைவான விந்தணுக்கள் இருப்பதை குறிக்கும்.
இந்த பாதிப்புகளால் மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டாலும் விந்தணுக்கள் கருப்பபையை நோக்கி நீந்தி செல்ல முடியாமல் போகலாம். இதனால் குழந்தை பிறக்காது. அதேபோல் ஆரோக்கியமான குழந்தை பிறக்க வேண்டும் என்றால் விந்தணுக்கள் வீரியத்துடன் இருக்க வேண்டும். சிகரெட் பழக்கத்தால் விந்தணுக்களின் வீரியம் குறைபாடு ஆரோக்கியமான குழந்தை பிறப்புக்கு இடையூறாக இருக்கலாம் என்று எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் டாக்டர்கள்.
அதுமட்டுமின்றி மேலும் புகைப்பழக்கம் என்பது பிளெட்லெட் செயல்பாடு மற்றும் நோயெதிர்பு திறன் உள்ளிட்டவற்றையும் பாதிப்பதால் இதய பிரச்சனைக்கும் வழிவகுக்கலாம். எனவே புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதனை உடனடியாக கைவிடுவது நல்லது. பொதுவாக சிகரெட் புகைப்பதால் அதில் உள்ள நிகோடின் உடலில் செரோடோனின் (Serotonin) எனும் ஹார்மோனை மூளையில் சுரக்க வைக்கிறது. இந்த ஹார்மோன் ஒரு ஹேப்பி ஹோர்மோனாகும். இது 2 மணிநேரம் வரை நீடிக்கும். அதன்பிறகு குறையும். இதனால் பலரும் மீண்டும் சிகரெட் புகைத்து அந்த ஹார்மோனை சுரக்க வைக்கின்றனர்.
பொதுவாக சிகரெட் பிடிக்கும் ஆரம்ப காலத்தில் இந்த செரோடோனின் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். அதன்பிறகு நாளைடைவில் குறைவாகும். இதனால் மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை பலரும் எதிர்கொள்ளலாம். மேலும் கூடுதலாக சிகரெட் புகைக்க தொடங்கலாம். இதனால் விந்தணுக்களின் எண்ணிக்கை முற்றிலுமாக குறைந்து ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications



