சென்னை: இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் எனில், 'தாம்பத்தியம்' ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதற்கு உடல் நலமுடன் இருத்தல் அவசியம். எனவே தினமும் ஒர மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
செக்ஸில் அதிக நாட்டம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் உடல்நலத்தில் உள்ள பிரச்சனைகள்தான். சோம்பேறித்தனம், அதீக கொழுப்புகள் இருக்கும் உணவை எடுத்துக்கொள்ளுதல், மன அழுத்தம் இவையெல்லாம் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் காரணிகள். இதிலிருந்து உங்களை மீட்டெடுப்பதுதான் உடற்பயிற்சி.

உடற்பயிற்சி செய்வதால் அடிப்படையில் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடற்பயிற்சி இதயத்தை பலப்படுத்துகிறது. இதனால், இதயம் ஒரு துடிப்பில் அதிக இரத்தத்தை பம்ப் செய்யும், இதன் மூலம் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். இப்படி நடப்பதால் இரத்த நாளங்களை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்திருக்க உதவுகிறது, இதனால் இரத்த அழுத்தம் குறைந்து, இதய நோய்களின் ஆபத்து குறைகிறது.
உடற்பயிற்சி தசைகளில் சிறிய சேதங்களை ஏற்படுத்தி, அது மீண்டும் குணமடையும் போது தசைகளை வலுவாகவும் பெரியதாகவும் மாற்றுகிறது. குறிப்பாக மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளும் தசைநாண்களும் வலுப்பெற்று, மூட்டுகளின் நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் அதிக அளவில் கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் எரிந்து, எடை சீரான அளவில் பராமரிக்கப்படுகிறது. இதெல்லாம் அடிப்படையான விஷயங்கள்.
ஆனால் உடற்பயிற்சி செக்ஸ் வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவுகிறது என்பதுதான் இதில் கவனிக்க வேண்டியது. எவ்வளவு நேரம் செக்ஸில் ஈடுபடுகிறோமோ, அவ்வளவு நேரம் அது இன்பகரமானதாக இருக்கும். அந்த வகையில், உடற்பயிற்சி இரத்த நாளங்களை விரிவுபடுத்தி, உடலின் அனைத்து பகுதிகளுக்கும், குறிப்பாக பாலியல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் செக்ஸில் நீண்ட நேரம் ஈடுபட உடல் ஒத்துழைக்கிறது.
ஆண்களுக்கு இது விறைப்புத்தன்மைக்கும், பெண்களுக்கு உணர்வுத்திறன் அதிகரிப்பதற்கும் உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில், வாரத்திற்கு குறைந்தபட்சம் 210 நிமிடங்களுக்கு மிதமான அல்லது தீவிர உடற்பயிற்சிகளைச் செய்பவர்களுக்கு, உடற்பயிற்சி செய்யாத வாழ்க்கை முறையைக் கொண்டவர்களை விட விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படும் அபாயம் 30% குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
உடற்பயிற்சியின் மூலம் உடல் கட்டுக்கோப்பாக மாறும். இதனால், உடல் கவர்ச்சியாக இருக்கும். இந்த கவர்ச்சித்தன்மை செக்ஸை மேலும் ரசனைக்குரியதாக மாற்றும். மறுபுறம் உடற்பயிற்சி எண்டோர்பின்கள் போன்ற நல்ல உணர்வை ஏற்படுத்தும் ஹார்மோன்களை வெளியிடுகிறது. இது உங்கள் மனநிலையை மேம்படுத்துவதோடு, பாலியல் விருப்பத்தையும் அதிகரிக்கிறது.
எனவே செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்க குறைந்தது தினமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம்.



Click it and Unblock the Notifications



