இலவச டிவியோ, காசு கொடுத்து வாங்கினதோ எல்லோருமே இன்றைக்கு டிவி பார்க்கின்றனர். தமிழ்நாட்டில் கரண்டு பிரச்சினையினால் டிவி பார்க்கும் நேரம் குறைந்திருந்தாலும் எப்படியாவது தினசரி 3 முதல் 5 மணிநேரம் வரை கண்டிப்பாக டிவி பார்த்தே தீருகின்றனர்.
அவ்வாறு டி.வி.யே கதி என கிடப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. வாரத்துக்கு 20 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து டி.வி.பார்க்கும் ஆண்களின் உயிரணு எண்ணிக்கை குறையும் வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் அவர்கள் குழந்தை பெறும் வாய்ப்பை இழந்து வருவதும் தெரிய வந்துள்ளது.
இளம் வயதுடைய ஆண்கள் அதிக நேரம் டிவி பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை இங்கிலாந்தின் ஜெர்னல் ஆப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் என்ற இதழ் வெளியிட்டுள்ளது.
குறையும் விந்தணுக்கள்
இந்த ஆய்வில் 18 வயது முதல் 22 வயதுடைய 189 ஆண்கள் உட்படுத்தப்பட்டனர். தற்போது அதிக நேரம் டிவி பார்க்கும் ஆண்களிடம் ஏற்படும் உயிரணு மற்றம் பற்றி கண்டறிவதுதான் இந்த ஆய்வின் நோக்கம். அதன் படி வாரத்திற்கு 20 மணி நேரம் அல்லது அதற்கு மேல் டிவி பார்க்கும் இளம் வயது ஆண்களிடம், அவ்வாறு டிவி பார்க்காத ஆண்களை விட சராசரியாக 44% உயிரணுக்கள் குறைவாக உள்ளதை கண்டறிந்துள்ளனர்.
வாரத்திற்கு 15 மணிநேரம்
அதே போன்று வாரத்திற்கு 15 மணி நேரம் அல்லது அதற்கு மேல் உடற் பயிற்சி செய்யும் ஆண்களுக்கு , வாரத்திற்கு 5 மணி நேரம் உடற் பயிற்சி செய்யும் ஆண்களை விட உயிர் அணுக்களின் எண்ணிக்கை 73% அதிகம் உள்ளதும் தெரியவந்துள்ளது.
புகை, மது, போதை
டிவி பார்ப்பது மட்டுமல்லாது அதிக மது அருந்துவது, புகைப்பது, நேரம் தவறி உண்பது , உறங்குவது என மனித வாழ்விற்கு பொருந்தாத வகையில் இன்றைய இளம் தலைமுறையினர் கடைபிடிக்கின்றனர். இதனால் குழந்தை பிறப்பு மட்டும் இன்றி பல வகை பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவில்தான் அதிகம்
ஆண்களின் உயிரணு குறையும் பிரச்சினை இந்தியாவில்தான் அதிகம் உள்ளது. 79 சதவீதம் ஆண்களும், 83 சதவீதம் பெண்களும் உடல் ரீதியாக பலவீனமாகவும் உள்ளனர். 51 சதவீதம் ஆண்களும், 48 சதவீதம் பெண்களும் அதிக கொழுப்பு சத்துமிக்க உணவை சாப்பிட்டு உடல் நலத்தை கெடுத்து கொள்கின்றனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி செய்யலாம்
அதே நேரத்தில் 15 மணி நேரத்துக்கு மேல் உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை 73 சதவீதம் அதிகரிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் இங்கிலாந்தில் இருந்து ஸ்போர்ட்ஸ் மெடிசின் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.