பணத்தின் தேடல்
சம்பாத்தியத்திற்காக வெளிநாடு செல்லும் பலர் அங்கேயே வருடக்கணக்கில் தங்கும் சூழ்நிலையில், இங்கிருக்கும் மனைவியின் நிலை பரிதாபமானதுதான். வெகுகாலம் பிரிந்திருப்பது இருவரின் செக்ஸ் உணர்வுகளை மெல்ல மெல்ல மழுங்கடிக்கச் செய்துவிடும் என்பதோடு, உடல் ஆரோக்கியமும் குறையும் என்பதை சொல்லித்தெரிய வேண்டும் என்பதில்லை. இணைந்து வாழும் தம்பதியர்களின் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதை கண்கூடாகாக் காணலாம்.
ஆடம்பர மோகம், பணத்தின் தேவை அதிகரிப்பு இதற்காக அதிகப்படியான வேலையை தேடி ஓடும் தம்பதியர் இன்றைக்கு அதிகமாகிக் கொண்டிருக்கின்றனர். இதனால் படுக்கை அறையில் தம்பதியர் இடையேயான காதல் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்குள் நிகழும் தாம்பத்ய உறவில் நேசமும், மனம் லயிக்கும் நெருக்கமும் இல்லாமல் போய் படுக்கை அறையானது பெயரளவுக்கு உடல்கள் மட்டும் இணையும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. இதுவே இருவருக்கும் இடையே மனநெருக்கடியும், பிரச்சினைகளும், சோர்வும் ஏற்பட காரணமாகிறது.
உறவுச் சிக்கல்
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பணத்தின் பின்னால் ஓடத் தொடங்கியதன் காரணமாக பெரும்பாலானோர் வாழ்க்கையில் இன்றைக்கு தாம்பத்ய உறவு என்பது ஏதோ ஒரு சடங்கு, சம்பிரதாயம் போல் ஆகிவிட்டது. இந்த நிலையை சமூகம் உணர்ந்து விழித்துக்கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் எல்லையில்லாமல் போய்விடும்” என்கின்றனர் பிரபல பாலியல் நிபுணர்கள்.
அதிக அளவில் பணம் சம்பாதிக்கும் நகரத்தில் வாழும் நாற்பத்தி நான்கு சதவீத திருமணமான ஆண்கள் தங்களுக்கு தாம்பத்ய உறவு மீது இருக்கும் ஆர்வம் குறைந்து கொண்டே இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகிறது.
நேரமின்மை
கணவன், மனைவி உறவுச்சிக்கலுக்கு முக்கிய காரணமாக இருப்பது நேரமின்மைதான். இரண்டு பேரும் வேலை பார்க்கும் குடும்பங்களில் இதுவே பெரிய வில்லன். அலுவலகத்திற்கு சென்று திரும்பும் மனைவி வீட்டிற்கு வந்ததும் அடுப்பங்கரை வேலையில் பிஸியாகிவிடுவார். இடை இடையே குழந்தைகளின் வீட்டுப் பாடத்திலும் சந்தேகம் தீர்க்கவேண்டும். அதுவே அவரை அசதிக்குள்ளாக்கிவிடும்.
மகிழ்ச்சி பரிமாற்றங்கள்
இதனிடையே அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் கணவர் வரும்போதே அசதியோடு வருவதால் சோர்வு அவரது நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது. இதனால் தம்பதியர் இருவருக்கும் அவர்களுக்கென்று நேரம் ஒதுக்க முடியாமல் போய் எப்போது தூங்கலாம் என்ற நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள்.
கணவனும், மனைவியும் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கவோ, அவர்கள் விரும்பிய பொழுதுபோக்குகளில் ஈடுபடவோ, அவர்கள் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருக்கவோ நேரமில்லாமல் போய்விடுகிறது. அதிக சோர்வு, களைப்பு, மறுநாள் பணி பற்றிய சிந்தனை போன்றவைகளுடன் அவர்கள் படுக்கைக்குச் செல்லுவதால் படுத்ததும் தூங்கிவிடுகிறார்கள். அதை மீறி அவர்கள் உறவு கொள்ள விரும்பினால், அது முழுமையான மன ஈடுபாட்டோடு அமையாமல் ஏதோ அவசர கோலத்து சடங்கு போல் ஆகிவிடுகிறது. இதனால் இருவருக்கும் இடையே ஒருவித திருப்தியின்மை ஏற்படுகிறது.
திருப்தியில்லா உறவு
இப்படி திருப்தியில்லாமல் உறவு வைத்துக்கொள்வதாலும், அதிக நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்வதாலும் காலப்போக்கில் அந்த கணவன், மனைவி இருவருக்குமே உறவில் எந்த சுகமும் இல்லாமல் போய்விடும். முடிவில் ஆசை குறைந்துபோய் அதன் விளைவுகளால் குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படுகிறது என்றும் பாலியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதில் குறிப்பிடவேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. கணவர், மனைவியிடம் அன்பு செலுத்தாமல் இருந்தாலோ, அவருடைய அன்றாட செயல்பாடுகள் பிடிக்காமல் இருந்தாலோ அவருக்கு பிறப்பு உறுப்பு இறுக்க நிலைத்தோன்றிவிடும். அதனால் உறவு, வலி நிறைந்த அவஸ்தையாக மாறி, உடலுறவில் நிரந்தர வெறுப்பை உருவாக்கிவிடும் என்றும் பாலியல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே பணத்தின் மீதான தேடலை குறைத்துக் கொண்டு குடும்பத்தில் அன்பின் மீதான தேடலை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.