காதலிக்கும்போது நிறையப் பேசுவார்கள். கவிதை படிப்பார்கள், அந்தப் புத்தகம் படிச்சியா, இந்தப் புத்தகம் படிச்சியா என்று விவாதிப்பார்கள். உலக விஷயங்களை உட்கார்ந்து பேசுவார்கள், உள்ளூர் விஷயங்களையும் கூடவே அலசுவார்கள். ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். சின்ன விஷயத்தைக் கூட ரொம்ப நேரமாக வறுத்தெடுப்பார்கள்.
ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு இந்த பேச்சுக்கள் குறைந்து போய் விடுகிறது. கணவன், மனைவி என்று ஆன பிறகு தனிமையில் சந்திக்கும்போது உடல் ரீதியான உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது பலரின் வழக்கம். இது அசாதாரணமானதல்ல, இயல்பான விஷயமும் கூட. அதேசமயம், அதிக அளவிலான பேச்சுக்கள் கணவன் மனைவியாகட்டும், காதலர்களாகட்டும், உறவை வலுப்படுத்த உதவுகிறது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
வெறும் பேச்சாக மட்டுமல்லாமல் மனைவிக்கு உதவுவது, சின்னச் சின்ன வேலைகளில் இணைந்து ஈடுபடுவது என்று செய்யலாம். இவையெல்லாம் இருவரின் அன்பையும் நெருக்கமாக்க உதவுகிறதாம்.
கணவனும், மனைவியுமாக சேர்ந்து சமைப்பது என்பது இப்போது சகஜமான விஷயம்தான். ஆனால் இப்போதும் கூட, மனைவிதானே சமைக்க வேண்டும், நாமெல்லாம் உட்கார்ந்து சாப்பிட்டால் போதாதா என்று நினைக்கும் கணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் சற்றே மாறினால் அவர்களுக்கு நல்லதாம்.
வார விடுமுறை நாட்களில் மனைவிக்கு சின்னச் சின்ன ஒத்தாசை செய்தால் அலாதிப் பிரியம் வருமாம். பெரிதாக செய்யக் கூடத் தேவையில்லை. காய்கறி நறுக்கிக் கொடுக்கலாம், அடுப்பில் ஏதாவது வைத்திருந்தால் அதை கவனிக்கலாம். மனைவி கேட்கும் பொருட்களை எடுத்துக் கொடுக்கலாம். கொடுக்கிற சாக்கில், சின்னதாக ஒரு முத்தம் வைக்கலாம். இதெல்லாம் மனைவியருக்கு அபரிமிதமான சந்தோஷத்தைக் கொடுக்கிறதாம். அடடா, இப்படி ஒரு கணவர் கிடைக்க புண்ணியம் செய்திருக்கணும் என்ற சந்தோஷத்தில், சாப்பாட்டில் உப்பு, காரமெல்லாம் கரெக்ட்டாகப் போட்டு சமைத்துக் கொடுப்பார்களாம்.
குக்கிங்கில் இப்படி கிக் இருக்கிறது என்றால், டிரைவிங் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். உங்களது மனைவி வாரம் முழுவதும் வாகனத்திலேயே செல்பவராக இருந்தால், விடுமுறை நாளில் அவரை உட்காரச் சொல்லி நீங்கள் ஜாலியாக கூட்டிச் செல்லுங்கள்.
சிலருக்கு வாகனம் ஓட்டத் தெரியாமல் இருக்கலாம். அப்படிப்பட்ட மனைவியருக்கு வாகனம் ஓட்டச் சொல்லித் தரலாம். இது காதலையும், அன்பையும் அதிகரிக்க வைக்கிறதாம். பரிவோடும், பாசத்தோடும், கவனத்தோடும், காதலோடும், கவலையோடும் வண்டி ஓட்டச் சொல்லித் தரும் கணவர்களை மனைவியருக்கு ரொம்பவே பிடிக்குமாம். மேலும் செக்ஸ் உறவை விட இதுபோன்ற அக்கறையான அணுகுமுறைதான் மனைவியருக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்கிறார்கள். அதுக்காக, வண்டியை இப்படி ஓட்டேன், ஏன் பிரேக் பிடிக்கிறே, கியரைப் போடாதே, யாரைக் கேட்டு திருப்பினே என்று டென்ஷனாக கத்திச் சொல்லித் தர வேண்டாம். அது 'விபத்தில்' போய் முடிந்து விடும்.
இதுபோக மலையேற்றமும் நல்லதொரு அனுபவம் தரும். நிறையப் பேருக்கு இந்த டிரக்கிங் தரும் இனிய அனுபவம் குறித்த ஞானம் இருப்பதில்லை. ஆனால் உண்மையில் ஜோடிகளாக இதுபோன்றவற்றில் ஈடுபடும்போது மிகுந்த உற்சாகம் பிறக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது, அனுபவித்தால்தான் தெரியும். கணவனும், மனைவியுமாக போகும்போது நிச்சயம் வித்தியாசமாக உணர்வீர்கள். இது உடல் ரீதியாகவும் இருவரையும் பிட் ஆக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வையும் கொடுக்கும். வித்தியாசமான அனுபவத்தையும் கொடுக்கும்.
இப்படி நிறைய இருக்கிறது... காதல் பார்வையுடன் இதுபோன்ற சுவாரஸ்யங்களையும் கலந்து பாருங்கள், வாழ்க்கை மகா இனிமையாக இருப்பதை உணர்வீர்கள்.
இந்த வாரம் ஏதாவது டிரை பண்ணிப் பாருங்களேன்...!