ஆண்டு முழுக்க கணவன் - மனைவியரிடையே சண்டை, வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம்தான். இது குறித்து இங்கிலாந்தில் 1000 தம்பதியரிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஜனவரியில்தான் மன உளைச்சல்கள் அதிகம் என்று பெரும்பாலான தம்பதியர் குறிப்பிட்டனர். ஒருநாளைக்கு சராசரியாக 20 முறை வாக்குவாதம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜனவரி மாதத்தில் சராசரியாக 38 சதவிகிதம் வீடுகளில் மோதல்கள் ஏற்படுகின்றன. 25 வயதுக்குக் குறைவானவர்களிடையே 48 சதவிகிதம் அளவுக்கு மோதல்கள் முற்றுகின்றன.
பொருளாதார பிரச்சினை
ஜனவரி மாதத்தில் பனியும் குளிரும் அதிகம். அதனால் கணவனும் மனைவியும் வீட்டில் 15 மணி நேரத்திற்கு மேலாக ஒன்றாக இருக்க நேரிடுகிறது. (அதிக நேரம் இருந்தால் ரொமான்ஸ்தானே வரணும்).
மோசமான பருவநிலை, நீண்ட இரவுகள், செலவுகள் அதிகமாவதால் சேமிப்பும் கையிருப்பும் குறைந்துவிட்ட நிலை போன்றவற்றால் மோதல்கள் வெடிக்கின்றன. பணம் சம்பாதிக்கும் ஆற்றல் கணவனுக்கு எவ்வளவு குறைவு என்பதை மனைவி அறியவும், செலவழிக்கும் ஆற்றல் மனைவியிடம் எவ்வளவு அதிகம் என்று கணவன் உணரவும் இந்த மாதம் பெரிதும் உதவுகிறது. எனவே பொருளாதாரப் பிரச்னைகளாலேயே பூசல் தொடங்குகிறது.
குளிர் விவாகரத்து
வருமானம் குறைவு, புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை குறைவு போன்ற காரணங்களால் 65 சதவிகிதம் தம்பதியர் விவாகரத்துவரைகூட போகின்றனர். இனி இவரோடு வாழக்கூடாது என்று புத்தாண்டிலேயே தீர்மானித்துவிடுவதாக 7 சதவிகிதம் பேர் ஒப்புக்கொண்டனர். காலையில் சீக்கிரம் எழுந்துகொள்ளவே முடிவதில்லை என்று 59 சதவிகிதம் பேர் வரை கூறியுள்ளனர்.
ஜனவரி மாதத்தில் குளிர் அதிகம், சூரிய வெளிச்சம் குறைவு என்பதால் சோம்பலும் மன வெறுமையும் அதிகமாக இருக்கும் என்று உளவியலாளர் டோனா டாசன் தெரிவிக்கிறார். பண முடை, வேலையில்லாமல் வெட்டியாக இருக்கும் நேரம் அதிகரிப்பு, சோம்பல், உற்சாகம் இன்மை, அடுத்து என்ன செய்வது என்ற இலக்கு இல்லாமை போன்ற காரணங்களால் ஜனவரி மாதத்தில் கணவன், மனைவியரிடையே பூசல்கள் அடிக்கடி தோன்றுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
வெயிலில் சண்டை குறைவு
அதே சமயத்தில் வெயில் காலங்களில் ஒரு நாளில் 10 மணி நேரம்தான் தம்பதியர் இருவரும் சேர்ந்து வீடு தங்குகின்றனர். அதிலும் பெரும்பாலும் தூங்குவதில் போய்விடுவதால் சண்டைக்கு போதிய அவகாசம் கிடைப்பதில்லை. எனவே தான் ஜனவரி மாதம் சண்டை மாதம் என்று முடிவுக்கு வந்துள்ளனர் ஆய்வாளர்கள்.