எதைக்கண்டாலும் வெறுப்பு, வெளியில் சொல்ல முடியாத தயக்கம். சொல்லத் துடித்தாலும் சொல்ல விடாமல் தடுக்கிற தயக்கம், எந்தச் செயலையும் செய்ய விடாமல் சோர்ந்து போகச் செய்யும் மன உளைச்சல் வெளியே தெரியாத வலி இவை மனஅழுத்தத்தின் அறிகுறியாகும். . செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாத போதும், எதிர்பாராத எதிர் விளைவுகள் ஏற்படும்போதும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடித்தான் போய் விடுகின்றனர். அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் பின்னடைவுகள் - மன அழுத்தங்கள் ஆகியவற்றை சரி செய்ய உலகெங்கும் உள்ள மனவியல் நிபுணர்கள் சில வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர். மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இதில் கூறப்பட்டுள்ள எளிய வழிமுறைகளை பின்பற்றினால் அதிலிருந்து எளிதில் விடுபடலாம்.
கட்டிப்பிடி வைத்தியம்
ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டால் முதலில் வெறுப்பு ஏற்படுவது தாம்பத்ய வாழ்க்கையில்தான். இது முற்றிலும் தவறானது. மனஅழுத்தத்தை போக்குவதில் தாம்பத்தியம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வாழ்க்கைத்துணையை பரிவுடன் கவனித்துக்கொண்டாலே பாதி சரியாகிவிடுமாம்.
அடிக்கடி கட்டிப்பிடித்தாலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்துமாம். அன்பை உள்ளுக்குள் வைத்துக் கொள்வதால் எந்த பயனும் இல்லை. அதனை அணைப்பது, முத்தமிடுதல், வருடுதல், கையை பிடித்துக் கொள்வது போன்ற வகைகளில் வெளிப்படுத்தினால் இருவருக்குமே அது அருமருந்தாகும்.
பேச்சில் புரியவையுங்கள்
நெருக்கம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி பொருந்துவதில்லை. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த கட்டுப்பாடுகளும் தம்பதிகளுக்குள் இல்லை. ஒருவர் மனது அழுத்தத்திற்குள்ளாகும்போது மற்றொருவர் அதனை போக்கும் வகையில் அவருடன் இனிமையாகப் பேச வேண்டும்.
நடனம் உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகம் தரக்கூடிய டானிக். மெல்லிய இசையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாழ்க்கைத்துணையுடன் நடனமாடுங்கள் பிறகு பாருங்கள் உள்ளத்தில் புத்துணர்ச்சி பீறிட்டு கிளம்பும். நடனத்துடன் கூடிய ஒருசில உடற்பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.
அன்பான பேச்சும், அசராத கவனிப்பும் எப்படிப்பட்ட நோயினையும் குணமாக்கிவிடும். எதுவுமே சிலகாலம்தான் என்பதை வாழ்க்கைத் துணைவருக்கு புரியவையுங்கள். அதிகாலையிலோ, அந்திப்பொழுதிலோ நடை பயிற்சி மேற்கொண்டால் உற்சாகம் பிறக்கும். பேசிக்கொண்டே நடந்தால் மன அழுத்தமாவது ஒன்றாவது, எல்லாம் ஓடியே போய்விடும்.