•  

மெனோபாஸையும் வெல்லலாம் ...!

Menopause
 
மெனோபாஸ். நடுத்தர வயதை எட்டிக் கொண்டிருப்பவர்களை மிரட்டும் மெனஸ் இது.

நடுத்தர வயதை எட்டிப்பிடித்தவர்கள் இளம் வயதுப் பெண்களுடன் அழகுக்கு இணையாக தங்களையும் பராமரித்துக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுவார்கள். எல்லாம் மெனோபாஸ் மிரட்டல்தான் காரணம்.

தங்களை விட இளம் வயதுப் பெண்கள் உடல் ரீதியாக ஆண்களை கட்டி இழுத்து விடுவார்களே என்ற பயத்தாலும், மேக்கப், முகப் பொலிவு, உடற்கட்டு குறித்து அதிகம் கவலைப்படுவார்கள்.

குடும்பப் பொறுப்புகள், பிள்ளைகளை கவனிக்க வேண்டிய கடமை. அவர்களுக்கு அதிக நேரத்தை செலவிட வேண்டிய கட்டாயம், நேரமின்மை என பல காரணங்களால், நடுத்தர வயதினருக்கு பெரும் மனக் கவலைகள், மனச் சுமைகள்.

ஆனால் மெனோபாஸ் காலத்தில் இருப்பவர்களுக்கு உடலுறவு மட்டுமே சந்தோஷம் தரும் விஷயமல்ல. அதையும் தாண்டி பல விஷயங்கள் சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பது நிறைய பேருக்கு மறந்து விடுகிறது.

உடல் ரீதியான சந்தோஷத்திற்கு உடலுறவு மட்டும்தான் ஒரே வழி என்றில்லை. அதற்குப் பிறகும் நிறைய மேட்டர்கள் உள்ளன.

மெனோபாஸ் காலத்தில்தான் உண்மையிலேயே சுதந்திரமாகவும், மன இறுக்கம் இன்றியும், எந்தவித பயமின்றியும் உடல் ரீதியிலான சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்.

இந்த காலகட்டத்தில்தான் கணவர்களுடன், இளம் வயதில் இருந்ததை விட சுதந்திரமாகவும், பயமின்றியும் உடல் ரீதியான உறவைக் கொள்ள முடிகிறது என பல பெண்கள் கூறுகிறார்கள்.

கர்ப்பமாகி விடுவோமோ என்ற பயம் இல்லை. நினைத்தபோது சந்தோஷமாக இருக்கலாம் என்பதே இதற்குக் காரணம்.

இருப்பினும், இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. மெனோபாஸ் வந்து விட்ட பெண்களுக்கு இரவு நேரத்தில் அதிகம் வியர்வை சுரக்கும். பெண்ணுறுப்பில் ஒரு வறட்சித்தன்மை இருக்கும். மன நிலை ஒரே மாதிரியாக இருக்காது. மன அழுத்தமும் கூடவே வந்து முழுமையான இன்பத்தை அனுபவிக்க தடையாக இருக்கின்றன.

ஆனால் மெனோபாஸ் பயத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி. மெனோபாஸ், இனியும் அவர்களுக்கு வறண்ட பாலைவனமாக இருக்கப் போவதில்லை. பாலைவனத்திற்கு அழகூட்டும் ஓயாசிஸ் போல, அவர்களுக்கும் ஒரு பரிகாரம் வந்து விட்டது.

இதையெல்லாம் ஒரே ஒரு தெரபி மூலம் சரி செய்து விடலாம். அதுதான் ஹார்மோன் மாற்று தெரப்பி.

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் மற்றும் மன நிலை மாற்றங்களை சரி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட தெரபிதான் இந்த ஹார்மோன் மாற்று தெரபி.

அது என்ன ஹார்மோன் மாற்று தெரபி ..?

மெனோபாஸ் காலத்தில் பெண்களிடம் இருந்து மறையும் ஹார்மோன்களுக்குப் பதிலாக இயற்கை அல்லது செயற்கை செக்ஸ் ஹார்மோன்களை செலுத்துவதுதான் இந்த தெரபியின் முக்கிய அம்சம்.

மாத்திரைகள், பேட்ச்சுகள் மற்றும் ஜெல் வடிவில் இதை உட் கொள்ளலாம். இதில், மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் குறைக்கும் எஸ்ட்ரோஜன் ஹார்மோன் இருக்கும். இது பெண்களுக்கு பெரும் வரமாக அமைந்துள்ளது.

மன கட்டுப்பாட்டை இந்த தெரபி அதிகரிக்கிறது, எலும்பின் பலத்தையும் கூட்டுகிறது, இயல்பான நிலையில் நமது உணர்வுகளும், உடலும் இருக்க உதவுகிறது.

மகப்பேறு மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின் பேரில்தான் இந்த தெரபியை எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது 6 மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை இந்த தெரபியை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த தெரபியை எடுத்துக் கொள்வதை விட மிக முக்கியமானது நமது மன நிலையை இயற்கையாகவே நமது சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொள்வதுதான்.

உடலுறவு மட்டுமே சந்தோஷம் தரும் விஷயம் என்ற முடிவுக்கு வந்து விடாமல், உடல் ஸ்பரிசங்கள், தித்திக்கும் முத்தம், நெருக்கமான அன்பு உள்ளிட்ட விஷயங்களும் நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று எண்ண வேண்டும்.

காதலையும், அன்பையும் வெளிப்படுத்த உடலுறவு மட்டுமே வடிகால் என்ற எண்ணத்தை விட வேண்டும். பரஸ்பரம் நம்பிக்கை, மாறாத அன்பு, உணர்வுகளுக்கு தரும் மதிப்பு ஆகியவையும் கூட கணவன், மனைவியரிடையே அன்பையும், காதலையும் இறுக்கமாக வைத்திருக்க உதவும்.

Story first published: Wednesday, January 21, 2009, 16:59 [IST]

Get Notifications from Tamil Indiansutras