•  

சந்தில் சிந்து பாடும் ஆண்கள்!

Extramarital Affairs
 
காய்கறிக் கடைக்குப் போகிறோம். எல்லாம் வாங்கிய பின்னர் கொஞ்சம்போல கொத்தமல்லி கொசுறாக கேட்போம். கேட்பதுதான் கொஞ்சம், ஆனால் கடைக்காரர் கேட்டதற்கும் மேலாகவே கொடுத்தாலும் கூட, என்னப்பா இவ்ளோதானா, இன்னும் கொஞ்சம் கொடேன் என்று கேட்காதவர்களே கிடையாது. இதற்கு அடிப்படை காரணம்- ஆசை.

எது கிடைத்தாலும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்தால் நல்லாருக்குமே என்ற மனதின் அடித்தள ஆசைதான் இதற்கெல்லாம் காரணம். இது செக்ஸுக்கும் பொருந்தும்.

என்னதான் கிளி மாதிரி மனைவி இருந்தாலும், குரங்கு போல ஒன்று கேட்குதாம் என்பார்கள் கிராமங்களில். இது உண்மைதான். எவ்வளவு அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், ஆண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளத் தயங்க மாட்டார்கள் என்கிறார் வில்லியம் நிக்கல்சன்.

நிக்கல்சன், இங்கிலாந்தின் பிரபல நாவலாசிரியரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண்களைப் பொறுத்தவரை போதும் என்ற மனமே இல்லை. குறைந்தது செக்ஸ் விஷயத்தில்.

என்னதான் அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், வாய்ப்பு கிடைத்தால், பின்விளைவுகள் இருக்காது என்று உறுதியாகத் தெரிந்தால் இன்னொரு பெண்ணுடன் உறவு வைக்க அவர்கள் தயங்க மாட்டார்கள்.

ஆண்களின் ஆசையும், செக்ஸ் ஆசையும் முற்றுப்புள்ளி இல்லாத தொடர் கதையாகவே உள்ளது. எவ்வளவு செக்ஸ் கிடைத்தாலும் அதை அனுபவிக்கவே அவர்கள் முயலுகிறார்கள். போதும் என்று நிறுத்திக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. வேடிக்கைக்காகவும், ஆசைக்காகவும்தான் இந்த கள்ள உறவுகளை அவர்கள் நாடுகிறார்கள்.

இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். குறிப்பாக மனைவிகள். தங்களது கணவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், பிறன் மனை நோக்காதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். ஆனால் வாய்ப்பு கிடைத்தால் சந்தில் சிந்து பாடும் மன நிலைதான் அத்தனை ஆண்களுக்கும் என்பதை அவர்கள் பெரும்பாலும் அறிவதில்லை.

எனக்கு கல்யாணமாகி 22 ஆண்டுகளாகி விட்டது. இதுவரை எனது மனைவிக்கு நான் துரோகம் செய்ததில்லை. உண்மையாகவே துரோகம் செய்ததில்லை. ஆனால் நானும் ஒரு ஆண்தான். சராசரி ஆண்தான். எனது மனமும் அதுபோன்ற எண்ணங்களில் அலை பாய்ந்ததுண்டு. எனக்கும் வாய்ப்பு கிடைத்தால் நானும் அந்தத் தவறைச் செய்வேன்தான்-பின்விளைவுகள் இல்லாவிட்டால். ஆனால் நான் தவறு செய்தால் அதற்கான பின்விளைவுகள் உடனே என்னைத் தேடி வந்து விடும். எனவேதான் இதுவரை நான் அந்தத் தவறைச் செய்யவில்லை. செய்யும் வாய்ப்பும் இல்லை என்றே கருதுகிறேன் என்கிறார் நிக்கல்சன்.

ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உணர்வு என்பது புற நிகழ்வுகளாகவே உள்ளதாக செக்ஸாலஜிஸ்டுகள் கூறுகிறார்கள். உணர்வுப்பூர்வமான செக்ஸ் உணர்வு அவர்களுக்கு வருவதில்லை. வெளி நிகழ்வுகளின் தூண்டுதலால் செக்ஸ் உணர்வை அவர்கள் அடைகிறார்கள். அந்த உணர்வை உடனடியாக வெளிப்படுத்தி விடவும் துடிக்கிறார்கள். இந்த போலியான உணர்வுகளுக்கு அவர்கள் காதல் என்றும் பெயர் வைக்கத் தயங்குவதில்லை.

ஒரு பெண்ணுடன் உடலுறவுக்குத் துடிக்கும் ஆண்கள், அவர்களை உண்மையாக காதலிப்பதில் கவனம் செலுத்துவதில்லை, முக்கியத்துவம் தருவதில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அந்தப் பெண்ணே சம்மதித்தாள், அதனால்தான் உறவு வைத்துக் கொண்டேன் என்று கூறும் ஆண்களே அதிகம். அதாவது பழியை பெண்கள் பக்கம் நைசாக திருப்பி விட்டு விடுகிறார்கள்.

நிக்கல்சன் தொடர்ந்து கூறுகையில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் செக்ஸ் உணர்வுகள் வேறுபாடானவை. பெண்கள் நம்பிக்கை அடிப்படையிலும், நீண்ட கால உறவின் அடிப்படையிலும்தான் பிறரிடம் தங்களை உடல் ரீதியாக ஒப்புவிக்க முன்வருவார்கள். இவன் நமக்கு நல்ல காவலனாக இருப்பான், இவனை நாம் நம்பலாம், இவனிடம் நம்மைக் கொடுத்தால் நலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் ஒரு ஆணிடம் தங்களைக் கொடுக்க முன்வருகிறார்கள்.

ஆனால் ஆண்கள் அப்படி இல்லை. பெண்களின் நம்பிக்கையை குழி தோண்டிப் புதைப்பதைத்தான் முதலில் அவர்கள் செய்கிறார்கள். யாருடனும் நாம் உறவு கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். அதை உரிமையாகாவும் கருதிக் கொள்கிறார்கள். இதுதான் ஆண்களுக்கும், பெண்களுக்கும் செக்ஸ் விஷயத்தில் உள்ள ஒரு வேற்றுமை.

எது எப்படி இருந்தாலும், செக்ஸ் என்பது உடல் வேட்கைக்காக மட்டுமல்ல, அதில் சற்று உண்மையான உணர்வும் இருக்க வேண்டும் என்பதை இரு பாலினரும், குறிப்பாக ஆண்கள் புரிந்து கொள்ளுதல் நலம்.

Story first published: Tuesday, November 9, 2010, 12:51 [IST]

Get Notifications from Tamil Indiansutras