•  

'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகாது!!

Erotic Literature
 
அது கணித வகுப்பு. அத்தனை மாணவர்களும் சுந்தரலிங்கம் சார் சொல்லிக் கொண்டிருந்த பார்முலாவை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். பாண்டியும், பாஸ்கரும் மட்டும் ஆப்சென்ட். எங்கே போனார்கள் என்று சக மாணவர்களுக்குக் குழப்பம்.

பள்ளிக்கூடத்திற்கு அருகே ஒரு கட்டடம். புதர்கள் மண்டிப் போயிருந்த அங்குதான் பாண்டியும், பாஸ்கரும் படு மும்முரமாக கையில் புக் ஒன்றுடன் உட்கார்ந்திருந்தனர். இருவரது முகங்களும் பரவசத்தை பளிச்சிட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. அப்படி என்னதான் படிக்கிறார்கள். அது-'சாவித்திரியின் காம ராத்திரி' என்ற நூல்.

இப்படிப்பட்ட அனுபவம் பெரும்பாலான இளைஞர்களுக்கு அவர்களின் பள்ளிக் காலத்தில் நிறைய இருந்திருக்கும். எந்தக் காலத்தில் இந்த ஆபாசப் புத்தக காலம் தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால் இப்போதும் இதற்கென்று ஒரு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது.

'எரோட்டிக் லிட்டரேச்சர்' என்று இங்கிலீஷ்காரர்கள் இதற்குப் பெயர் சூட்டி வைத்துள்ளனர். ஆனால் உண்மையில் இது மனதையும், உடலையும் கெடுத்து சீரழிக்கும் விஷமாகவே இன்று நம்முள் ஊடுறுவியுள்ளது.

பல்வேறு கவர்ச்சிகரமான பெயர்களில் இத்தகைய புத்தகங்களை பெட்டிக் கடைகளின் உள்ளே தோரணம் போல தொங்க விட்டு விற்கிறார்கள். மட்டமான 'நியூஸ் பிரின்ட்'டில் அச்சிடப்பட்ட இந்த புத்தகங்களுக்கு தனி மார்க்கெட் உள்ளது. அதில் இடம் பெறும் கதைகளை எழுதவே ஒரு கூட்டம் இருக்கிறது. இப்படிப்பட்ட கதைகள் எழுதியே நிறைய சம்பாதிப்போரும் உள்ளனராம்.

ஆனால் உண்மையில் இந்த நூல்களால் என்ன பயன்...?

நிச்சயமாக ஒன்றுமே இல்லை. ஆரோக்கியமான தகவல்களை இவர்கள் தருகிறார்களா என்றால் சுத்தமாக இல்லை. வெறும் காமத்தைத் தூண்டும் கதைகளையும், படங்களையும்தான் இந்த நூல்கள் தாங்கி வருகின்றன. அந்தக் காலத்தில் சரோஜாதேவி கதைகள் என்ற பெயரில் படு மும்முரமாக விற்றன இத்தகைய புத்தகங்கள்.

இப்படிப்பட்ட நூல்களில் இடம் பெறும் கதைகள் அனைத்தும் வெறும் கற்பனையே. உண்மை ஒரு சொட்டு கூட கிடையாது. காம இச்சையைத் தூண்டும் இத்தகையை புத்தகங்களைப் படிப்போரில் பெரும்பாலானவர்கள் பள்ளிக்கூட மாணவர்கள்தான். பள்ளி நேரத்தில் கிடைக்கும் கேப்பில் கூட்டமாக உட்கார்ந்து இதைப் படித்து, உணர்ச்சிவசப்பட்டு தவறான பாதைக்கு திரும்புவோர் நிறையவே உள்ளனர்.

இந்த எரோட்டிக் லிட்டரேச்சர் உண்மையில் சலனமில்லாத மனங்களை சலனப்படுத்தி, சங்கடப்படுத்தி, சகதியில் சிக்க வைக்கவே உதவுகின்றன.

மேலும் தவறான, முறைகேடான உறவுகளை சித்தரிக்கும் கதைகள்தான் இதில் நிறைய வருகின்றன. அண்ணன்-தங்கை, தாய்-மகன், அத்தை-மருமகன் இப்படி கலாச்சாரத்தை வேரோடு அறுத்துப் போடும் வகையிலான தவறான உறவுகளை சித்தரிக்கும் கதைகளையே இவை தாங்கி நிற்கின்றன.

இப்படிப்பட்ட புத்தகங்களைப் படிப்போருக்கு மனதில் தவறான எண்ணங்கள் வருவதோடு, அதை செயல்படுத்திப் பார்க்கும் விபரீதத்திலும் இறங்கி விடுகின்றனர்.

இப்படிப்பட்ட புத்தகங்களை படிப்பது கூட ஒரு வகையான மன வியாதிதான் என்கிறார்கள் மன நல மருத்துவர்கள். ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணும் உரிய வயதை அடையும்போது குறிப்பாக டீன் ஏஜில் இருக்கும்போது செக்ஸ் குறித்த சிந்தனைகள் மேலோங்கி நிற்பது இயற்கை. அதை வெளிப்படுத்த வடிகால் ஏதும் இல்லாததால் அவர்கள் அதை எப்படி வெளிக் கொண்டு வருவது என்பது தெரியாமல் தடுமாறுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் கையில் இந்த நூல்கள் சிக்கும்போது படித்து இன்புறுகின்றனர். அவர்களில் பலர் சுய இன்பப் பழக்கத்திற்கு ஆளாகின்றனர்.

ஆண்கள் மட்டும்தான் என்றில்லாமல் பெண்களும் கூட இதை நிறையவே படிக்கின்றனர். ஆனால் டீன் ஏஜ் ஆண்கள்தான் இதற்கு கிட்டத்தட்ட அடிமை போல மாறி விடுகின்றனர் என்கிறார்கள் டாக்டர்கள்.

டீன் ஏஜ் பருவத்தில் ஒவ்வொரு இளைஞனுக்கும் தடுமாற்றம் இருக்கவே செய்யும். அதை எப்படி சமாளிக்கிறான் என்பதில்தான் அவனது மன வளர்ச்சியும், மன உறுதியும் அமைகிறது. அந்த சமயத்தில் இதுபோன்ற மட்டமான நூல்களைப் படிப்பதற்குப் பதில் செக்ஸ் குறித்த ஆரோக்கியமான நூல்களைப் படிக்கலாம். அது செக்ஸ் என்றால் என்ன என்பது குறித்து நமக்கு விளக்க உதவும்.

செக்ஸ் குறித்த போதுமான அறிவைப் பெற இந்த டீன் ஏஜ் வயதைப் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, தவறான கருத்துக்கள் நமது மனதில் பதிய வாய்ப்பு கொடுத்து விடக் கூடாது என்பதில் டீன் ஏஜ் இளைஞர்கள் கவனமாக இருப்பது நலம்.

டீன் ஏஜ் வயது என்றில்லாமல் எந்த வயதாக இருந்தாலும் சரி நமது மனதையும், உடலையும் ஆரோக்கியமாகவும், களங்கமில்லாமலும், திடமாக வைத்துக் கொள்வது முக்கியமானது.

செக்ஸ் குறித்த சிந்தனை அதிகமாக இருக்கிறதா, தடுக்க முயலவே வேண்டாம். தாராளமாக அதில் சிந்தனையை செலுத்துங்கள். பசி, தூக்கம் போன்றதுதான் செக்ஸ் உணர்வும். ஆனால் அதை சரியான வடிகால் பக்கம் திருப்புவதுதான் உங்களது சாமர்த்தியம். சரியான நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள். தேவைப்பட்டால் செக்ஸாலஜிஸ்டுகளை அணுகி சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுங்கள். இப்படிப்பட்ட களத்தில் இறங்கினால் நிச்சயம் நல் முத்தை எடுக்கலாம்-மாறாக சாக்கடைக்குள் இறங்கி விட்டால் நாற்றம்தான் மிச்சமாகும்.

Get Notifications from Tamil Indiansutras