சிலர் காதலை புதிரானது என்கிறார்கள். அது ஒரு மாயம் என்பது சிலரின் கூற்று. சிந்தனையைத் தூண்ட உதவும் காதல், காதல் ஒரு மகிழ்ச்சியான அனுபவம், அது விவரிக்க முடியாத அனுபவம் என்பது சிலரின் வாதம். உற்சாகம் தருவது காதல், சொல்லித் தெரிவதில்லை காதல் என்றும் காதலுக்கு சிலர் வகுத்துள்ள இலக்கணங்கள்.
தத்துவ ஞானி பிளேட்டோ காதல் குறித்து என்ன கூறுகிறார் என்றால்- காதல் ஒருவரைத் தொடும்போது அவர் கவிஞராகிறார்.
அதையே வால்டேர் கூறும்போது, இயற்கை உருவாக்கிய அழகிய ஓவியம்தான் காதல். அதில், கற்பனையும் சேரும்போது அழகான காவியமாகிறது என்கிறார்.
காதலில் விழுந்தவர்கள் முதலில் கவிஞராகிறார்கள். பிறகு அவர்கள் பேசினாலே கவிதை மழைதான்.
''நிலவு சுடும்
சூரியன் சுகமாகும்
காதல்''
காதலியை நினைத்து இரவெல்லாம் தூங்க முடியாமல் தவிக்கும் காதலனுக்கு நிலவு கூட தகிப்பை, தவிப்பைத் தருகிறது. ஆனால் அவளை சந்திக்கப் போகும் பகலை நினைத்தால் சூரியனின் அனல் கூட எனக்கு சுகமாகத் தெரிகிறதாம்.
''உன் சிரிப்பு என்னை பலவீனமாக்கி விட்டது
நான் பலம் பெற
மீண்டும் ஒரு முறை சிரியேன்''
அவளின் புன்னகையில் வீழ்ந்து போன அவனுக்கு மீண்டும் பலம் பெற அதே சிரிப்பு தேவைப்டுகிறது. காதலின் வினோதம் இது.
''தெளிவான வானமாய்
என் மனம் இருந்தும்
நீ
காதல் மேகமாய் நினைவில் வந்ததால்
எனக்குள் மழை''
இப்படி கவிதை அருவியில் அவர்கள் நனைகிறார்கள் உலகக் காதலர்கள்.
மார்ட்டின் லூதர் கிங்கிடம் காதல் குறித்து கேட்டபோது, வெறுப்புணர்வு வாழ்க்கையை முடமாக்குகிறது, காதல் வாழ்க்கையை உணர வைக்கிறது என்றார்.
கண்கள் சந்தித்த நொடியில் என் இதயத்தில் அவள் விழுந்தாள் என்பதுதான் காதல் வயப்பட்ட அத்தனை ஆண்களும் சொல்லும் ஒரே வார்த்தையாக உள்ளது. இப்படி காதலுக்கு உயர் மரியாதை கொடுத்தே அத்தனை பேரும் பேசியுள்ளனர், எழுதியுள்ளனர்.
அதேசமயம், இன்றுள்ள இளைஞர்களும் சரி, இளைஞிகளும் சரி காதல் எது, நட்பு எது என்று தெரியாமல் குழம்பிக் கிடக்கிறார்கள். ஆறுதலாக, பரிவாக, பாசமாக, தோழமையோடு யாராவது ஒரு பெண் பேசினால், உடனே அந்தப் பெண் மீது காதல் கொள்பவர்கள்தான் நிறையப் பேர் உள்ளனர். இன்னும் சிலருக்கு காதல் கொண்ட வேகத்திலேயே காமத்தின் தாக்கமும் ஏற்பட்டு குழப்பமாகி, கடைசியில் அந்தக் காதல் முறிந்து போய் சோகத்தில் மூழ்கிப் போய் விடும் நிலையையும் இன்று காண்கிறோம்.
காதல் பொறுமையானது, இரக்கமானது. பொறாமைக்கும், வெறுப்புக்கும் இங்கு இடமில்லை. பகிர்ந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல், புரிந்து கொள்ளுதல் என்று பல நல்ல விஷயங்கள் கலந்ததுதான் காதல். பெருமைக்காக காதலைப் பயன்படுத்துவோர் பலர் உண்டு. அது காதலுக்கு பெரிய அவமரியாதை என்பதை அவர்கள் உணர்வதில்லை.
உண்மையும், நேர்மையும் கலந்த காதல் என்றும் அழிவதில்லை, தோற்பதில்லை என்பார்கள். காதலின் அடிப்படையும் கூட அதுதான். ஒரு பெண் ஒரு ஆணை ஏன் காதலிக்க முடிவு செய்கிறாள்? இவன் நம் மனதுக்கு ஒத்து வருபவனாக இருக்கிறான், இறுதிவரை உடன் வருவான், துயரங்களில் துணை இருப்பான், இவனின் சினேகிதம் ஆறுதல் தருகிறது என்ற எண்ணத்தில்தான். இது ஆண்களுக்கும் பொருந்தும். இந்த எண்ணங்கள் எந்தக் கோட்டில் உடைகிறதோ அந்த நொடியே அந்தக் காதலின் அஸ்திவாரம் தவிடு பொடியாகி விடுகிறது.
முழுமையான புரிந்து கொள்ளுதல், பாதுகாப்புணர்வு, முழுமையான நம்பிக்கை, உண்மையான நேசம், இன்ன பிறதான் ஒரு காதலை உயிர்ப்புடன், துடிப்புடன், உண்மையான காதலாக நீட்டிக்க வைக்கும்.
காமம் இல்லாத காதல் தவறா என்று கேட்கலாம். காதல் என்பது பால் என்றால், காமத்தை சர்க்கரை என்று கூறலாம். வெறும் பாலை சாப்பிட முடியும், ஆனால் வெறும் சர்க்கரையை எவ்வளவு தூரம் சாப்பிட முடியும்?. பாலும் வேண்டும், சர்க்கரையும் வேண்டும்-அளவோடு. அது காதலுக்கும், காமத்திற்கும் பொருந்தும்.
காதல் ஒரு மனிதனை முழுமையாக்க உதவுகிறது. ஏனோதானோவென்று இருக்கும் ஒருவன் காதல் வயப்பட்டவுடன் மாறிப் போவதை நாம் பார்க்கலாம். காதலுக்கு மட்டும்தான் அந்த சக்தி. அது ஏன் காதல் வயப்பட்டால் மட்டும் மாறுகிறார்கள். காதல் வயப்படுபவர்களுக்கு தன்னம்பிக்கை கூடுகிறது, புதிய அந்தஸ்து கிடைத்த சந்தோஷத்தில் தங்களை உயர்த்திக் கொள்ள விரும்புகிறார்கள். இதனால் ஏற்படுவதே இந்த மாற்றம்.
ஆண், பெண் இருவரின் உள்ளங்கள் நம்பிக்கை, நேசம், பாசம் ஆகிய இழைகளால் பிணைக்கப்படும்போது இருவரும் சேர்ந்து உயருகிறார்கள். நமக்கென்று ஒரு துணை இருக்கிறது என்ற நிலையை நினைக்கும்போது வரும் சந்தோஷம் அனுபவித்தால் மட்டுமே புரியக் கூடியது.
சரி உண்மையான காதலை எப்படி உணர்வது?
''நீ சிரித்தால்
எனக்குள் எதிரொலிக்கும்
காதல்''
இப்படித்தான் இருக்க வேண்டும், உண்மையான காதல் வயப்பட்டவர்களாக இருந்தால்.
உடல் ஈர்ப்பாக மட்டுமல்லாமல் மன ஈர்ப்பு ஏற்படும்போதான் உண்மையான காதலை உணர முடியும். நட்போடு பேசினால், நாலு வார்த்தை ஆசையாகப் பேசினால் உடனே காதல் என்று கூறி விட முடியாது. கவிதை எழுதுவது, பிடித்த பொருட்களை வாங்கித் தருவது, 'அவுட்டிங்' கூட்டிச் செல்வது, பணத்தை தாறுமாறாக செலவிடுவது- இதெல்லாமும் கூட காதலாகி விட முடியாது.
உணர்வுகளுக்கு அங்கு மதிப்பு இருக்க வேண்டும். பாசத்திலும், நேசத்திலும் பாசாங்கு இருக்கக் கூடாது. வெறும் வார்த்தையாக மட்டுமல்லாமல், உண்மையான செயல்பாடுகள் காணப்பட வேண்டும். உன் முன்னேற்றத்திற்கு நீ இப்படிச் செய்யலாம், இதை நீ செய்தால் சரியாக வரும். உனது உயர்வுக்கு இது உதவும் என்ற அறிவுரைகளில் உண்மையான காதலைக் காணலாம்.
காதல் என்றால் கூடவே எதிர்ப்பும் பின்னாலேயே நிற்கும். அதையும் உணர்ந்து, அதை எப்படி தாண்டுவது என்பதில் பாசிட்டிவான சிந்தனை இருக்க வேண்டும். அவசரம் காட்டுவது அலங்கோலத்திற்கு வழி வகுத்து விடலாம்.
உண்மையான காதல், மரியாதை, நம்பிக்கை, பாசப் பிணைப்பு ஆகியவற்றை பலமாக கொண்ட ஒரு அடித்தளமாகும். ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும் சக்திதான் காதல்.
எனவே, உண்மையாக காதலிப்போம், உண்மையான காதலைக் காதலிப்போம், காதலைக் கொண்டாடுவோம்.