•  

ஏலத்துக்கு வருகிறது செக்ஸ்.காம்!

நியூயார்க்: இணையதள டொமைன் பெயர்களிலேயே மிகவும் காஸ்ட்லியானதாக கருதப்படும் செக்ஸ்.காம் என்ற டொமைன் பெயர் அடுத்த வாரம் ஏலத்துக்கு வருகிறது.

இணையதள உரிமையாளர்கள் மத்தியில் நியூஸ் டாட் காம், பிஸா டாட் காம் போன்ற எளிமையான பெயர்களுக்கு கிராக்கி அதிகம். பிஸா.காம் என்ற டொமைன் பெயர் கடந்த 2008ம் ஆண்டிலேயே 2.5 மில்லியன் டாலர்களுக்கு விலை போனது.

இந்த வரிசையில், செக்ஸ்.காம் என்ற டொமைன் பெயர் மிகவும் காஸ்ட்லி ஆனதாக கருதப்படுகிறது.

இரண்டாண்டுகளுக்கு முந்தைய காலத்திலேயே இந்த செக்ஸ்.காம் மூலம் தினசரி 15 ஆயிரம் டாலர் வருமானம் இருந்தது.

செக்ஸ்.காம் என்ற டொமைனை முதல்முறையாக 1994ம் ஆண்டில் கிரான்ட் மீடியாவைச் சேர்ந்த கேரி கிரிமென் என்பவர் பதிவு செய்து வைத்திருந்தார்.

இவரிடம் இருந்து 2006ம் ஆண்டில் எஸ்காம் நிறுவனம் வாங்கியது. விற்பனை ஒப்பந்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. என்றாலும், இந்த டொமைனை எஸ்காம் நிறுவனம் சுமார் 1.4 கோடி அமெரிக்க டாலருக்கு வாங்கியதாக செய்திகள் வெளியாயின.

அப்போது எஸ்காம் நிறுவனம், நியூஜெர்சியில் உள்ள டிஓஎம் பார்ட்னர்ஸ் என்ற கம்பெனியில் இருந்து கடனுதவி பெற்றுத்தான் செக்ஸ்.காம் டொமைனை வாங்கியிருந்தது.

இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக கடனுக்கான பணத்தை எஸ்காம் திருப்பிச் செலுத்தவில்லை என்று தெரிகிறது.

இதனால், கடன் ஒப்பந்தப்படி செக்ஸ்.காம் டொமைனை ஏலத்துக்கு விட டிஓஎம் பார்ட்னர்ஸ் முடிவு செய்துவிட்டது.

வரும் 18ம் தேதி நியூயார்க்கில் உள்ள விண்டெல்ஸ் மார்க் லேன்&மிட்டென்டார்ஃப் சட்ட நிறுவனத்தில் இந்த ஏலம் சட்டப்படி நடக்கும் என டிஓஎம் நிர்வாகி ஸ்காட் மாத்யூஸ் கூறியுள்ளார்.

எனினும் எஸ்காம் மற்றும் செக்ஸ்.காம் தரப்பில் இருந்து இதுதொடர்பாக அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.



Story first published: Wednesday, March 10, 2010, 9:31 [IST]

Get Notifications from Tamil Indiansutras