•  

'ஆபீஸ்' நேரத்தில் 'பலான சைட்'- நிறுவனங்களுக்கு பாதிப்பு

Browsing
 
மும்பை: அலுவலகங்களில் வேலைக்கு தொடர்பில்லாத இணையதளங்களை பணியாளர்கள் பயன்படுத்துவதால் தினந்தோறும் 12.5 சதவீத உற்பத்தித்திறன் பாதிக்கப்படுவதாக 'அசோசம்' நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அலுவலகங்களில் பணியாளர்கள் இன்டர்நெட் வசதியை பயன்படுத்துவது குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பான 'அசோசம்' சார்பில் சமீபத்தில் தேசிய அளவிலான கருத்துக்கணிப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்திய பணியாளர்களில் இன்டர்நெட் வசதியோடு இருக்கும் நபர்களில் 84 சதவீதம் பேர் 'இன்டர்நெட்டுக்கு அடிமை'யாகி இருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இன்டர்நெட் பயன்படுத்தாமல் ஒருநாள் கூட இருக்கமுடியாது என மனநிலையை கொண்டுள்ள இவர்கள், சராசரியான நேரத்துக்கும் மிகுதியாகவே இணையத்தில் உலா வருவதாக கூறப்படுகிறது.

'சோஷியல் நெட்வொர்க்கிங்' எனப்படும் ஆர்குட், மைஸ்பேஸ் போன்ற தளங்களை இளம் பருவத்தினர் 93 சதவீதம் பேர் தெரிந்துவைத்துள்ளனர்.

சராசரியாக ஒருநாளைக்கு குறைந்தது ஒருமணிநேரத்தையாவது இவர்கள் இந்த தளங்களுக்காக செலவிடுதாக கூறியுள்ளனர். குறிப்பாக பணி நேரத்தில் இதுபோன்ற தளங்களுக்கு செல்வதால், நிறுவனங்களில் ஒருநாளைக்கு 12.5 சதவீதம் உற்பத்தித்திறன் (புரொடக்டிவிட்டி) பாதிக்கிறது.

அசோசம் பொதுச்செயலாளர் டி.எஸ்.ராவத் இதுகுறித்து கூறுகையில், 'இம்மாதிரியான பரவுசிங் கலாச்சாரத்தால் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனுக்கும் ஆபத்துதான்.

வேலைக்கு அப்பாற்பட்டு, நண்பர்களோடு அரட்டை, ரொமான்ஸ் அல்லது விரும்பிய தகவல்களை தெரிந்துகொள்வது என பல காரணங்களுக்காக பணியாளர்கள் இணையதளங்களுக்கு செல்கின்றனர். இதை வாடிக்கையாகவும் அவர்கள் வைத்துள்ளனர்.

இதனால் அலுவலகத்திற்கான அவர்களின் மனித உழைப்பு எட்டு மணி நேரத்தில் இருந்து ஏழு மணியாக குறைகிறது. பெருநகரங்களில் உள்ள பணியாளர்களில் 77 சதவீதம் பேர் ஆர்குட் உறுப்பினர்களாக உள்ளனர்' என்றார்.

இந்த ஆய்வுத் தகவலின் படி, 60 சதவீத அலுவலகங்கள் 'சோஷியல் நெட்வொர்கிங்' தளங்களை தடை செய்துள்ளன. 40 சதவீத பணியாளர்கள் தங்கள் அலுவலகத்தில் எவ்வித தடையுமின்றி அரட்டையடிக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, அறிவுக்காகவும் உறவுகளுக்காகவும் இணையத்தை சார்ந்திருப்பது ஆரோக்கியமான மனநிலைக்கு அழகல்ல என உளவியல் நிபுணர்களும் குரல் எழுப்புகின்றனர்.

இந்துஜா மருத்துவமனையின் உளவியல் பிரிவு மருத்துவர் வசந்த் முந்தரா இதுபற்றி கூறுகையில், 'இன்டர்நெட்டினால் விளையும் சாதகமான அம்சங்கள் ஏராளம் உள்ளன என்பதை மறுக்கவே முடியாது.

ஆனால், அதேவேளையில் சுற்றியுள்ள நிஜங்களை மறந்து, முகம் தெரியாத தொடர்புகளுடன் மணிக்கணக்கில் அரட்டை அடிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பவர்களுக்கு மனநிலையும், உடல்நிலையும் ஆரோக்கியமாக இருக்கும் என உத்தரவாதம் தரமுடியாது.

இது ஒருவகையான எந்திரத்தனமான புத்தியை வளர்த்துவிடும்' என்றார். இளைஞர்கள் இன்டர்நெட்டுக்காக மொபைல்போன்களை பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதும் இந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

Story first published: Monday, January 11, 2010, 11:25 [IST]

Get Notifications from Tamil Indiansutras