சென்னை: வேலை, குடும்பம், பொருளாதார நெருக்கடி இந்த விஷயங்களில் நம்மில் பலர், திருமணம் முடிந்தவுடன் பாலியல் மீது கொண்டிருக்கும் நாட்டத்தை விட்டுவிடுகின்றனர். ஆனால், பாலியல் இன்பம் என்பது வாழ்க்கை முழுவதும் தொடரக்கூடியது. இதனை சரியாக பராமரிக்க போதுமான அளவுக்கு தூங்குவது மிகவும் முக்கியம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதாவது, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7-8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். குறிப்பாக இளைஞர்களுக்கு 8 மணி நேர உறக்கம் முக்கியம். இந்த உறக்கம் தொடர்ச்சியாக தடைபடும்போது அது பாலியல் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தூக்கம் என்பது உடல் ரீசார்ஜ் செய்யும் நிலை ஆகும். தூங்கும்போது நாம் செயலற்ற நிலையில் இருப்பதாக நினைத்துக்கொள்கிறோம். ஆனால் தூங்கும்போதுதான் நமது மூளை சிறப்பாக வேலை செய்கிறது. எனவே, உறக்கம் ரொம்ப முக்கியம். தூக்கத்தின் போது, வளர்ச்சி ஹார்மோன், டெஸ்டோஸ்டிரோன் போன்ற முக்கிய ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் டெஸ்டோஸ்டிரோன் என்பது மிகவும் முக்கியமானதாகும்.
இது ஆண்களின் விந்தகங்களின் வளர்ச்சிக்கும், விந்து உற்பத்திக்கும் அத்தியாவசியமானது. பருவமடையும் காலத்தில் ஆண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு இதுவே முக்கியக் காரணம். உதாரணமாக, குரல் மாற்றம், முகத்தில் முடி வளர்ச்சி, தசை வளர்ச்சி மற்றும் எலும்புகள் வலுப்பெறுதல் போன்றவற்றிற்கு இந்த ஹார்மோன்தான் மிக முக்கிய காரணம். தசை மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும் இந்த ஹார்மோன் பயன்படுகிறது. மட்டுமல்லது இது ஆண்களின் மனநிலை, குறிப்பாக பாலியல் ஆசையை சீராகப் பராமரிக்க உதவுகிறது.
பொதுவாக, டெஸ்டோஸ்டிரோன் அளவு ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருக்க வேண்டும். இது வயது, உடல்நலம், வாழ்க்கை முறை போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடும். டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருக்கும்போது, அது பாலியல் குறைபாடுகள், சோர்வு, மனநிலை மாற்றங்கள் மற்றும் தசை இழப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். தூக்கம் குறைவதால் டெஸ்டோஸ்டிரோன் அளவும் குறையும். இதனால் ஆண்மை குறைவு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
தூக்கம் இன்னொரு மேஜிக்கையும் நமது உடலில் செய்கிறது. பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களையும் தூக்கம் உற்பத்தி செய்கிறது. போதுமான அளவுக்கு தூக்கம் இல்லையெனில் பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் சுரக்காமல் போகலாம். இதனால், அதிக பசி எடுத்து, உடல் பருமன் அடைந்துவிடும். எடை அதிகமானால் பாலியல் ஆசைகள் குறைய தொடங்கிவிடும். எனவே ஒவ்வொரு நாளும் போதுமான அளவுக்கு தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
தூங்குவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதன் மூலம், உடல் ஆரோக்கியமாக பராமரிக்கப்படும். எனவே தூக்கம் முக்கியம் பசங்களா!



Click it and Unblock the Notifications



