சுவீடன் நாட்டைச் சேர்ந்த 1500 மூத்த தம்பதியரிடம் அவர்களின் தாம்பத்ய வாழ்க்கைக் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதில் 52 சதவிகிதம் பேர் எழுபது வயதிற்கு மேல் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மனித வாழ்க்கையில் செக்ஸ் என்பது முக்கிய அம்சம், அது நேர்மறை எண்ணங்களை உருவாக்க வல்லது. எனவேதான் 70 வயதிலும் உற்சாகமாக உறவில் ஈடுபட முடிகிறது என்கின்றனர் ஆய்வில் பங்கேற்ற மூத்த குடிமக்கள்.
எழுபதிலும் ஆசை வரும்
இதேபோல் எழுபது வயதிலும் கூட செக்ஸ் உணர்வுகள் வற்றாது. அந்த வயதிலும் ஆக்டிவாக செயல்படும் என அமெரிக்க ஆய்வு ஒன்று கூறுகிறது. அமெரிக்கர்களிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 60களில் இருப்போரில் பெரும்பாலானவர்களும், 70 வயதுகளின் தொடக்கத்தில் இருப்போரில் 50 சதவிகிதம் பேர் சுறுசுறுப்பான செக்ஸ் உறவுகளில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வுக்காக 57 முதல் 85 வயது வரையிலான 3000 அமெரிக்கர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. தங்களது பாலுணர்வு நடவடிக்கைகள் குறித்த தகவல்களைத் தருமாறு இவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.
பெண்களுக்கு ஆசை இல்லை
ஆனால் 57 வயதைக் கடந்த ஆண்களை விட பெண்களுக்கு செக்ஸ் ஆசை குறைவாக உள்ளது தெரிய வந்தது. மேலும் பார்ட்னர் இல்லாமல் வாழக் கூடிய வகையிலான மனப் பக்குவம் கொண்டவர்களாக இந்த வயதுடையப் பெண்கள் உள்ளனர். இனியும் தங்களுக்கு செக்ஸ் ஆசை தேவையில்லை என்பது இவர்களது கருத்து. பெண்களில் 43 சதவீதம் பேர் ஆசை இல்லாமல் உள்ளனர். 39 சதவீத பெண்களுக்கு பெண்ணுறுப்பு வறட்சி பிரச்சினை உள்ளது.
தாத்தாக்களுக்கு ஆர்வம் அதிகம்
70 முதல் 80 வயது கொண்ட பெண்களுக்கு செக்ஸ் ஆர்வம் பெரிய அளவில் இல்லை. ஆனால் இந்த வயதுடைய தாத்தாக்களுக்கு செக்ஸ் ஆசை சிறப்பாக உள்ளதாம். 37 சதவீதம் ஆண்களுக்கு உறுப்பு எழுச்சியின்மை குறைபாடு காணப்படுகிறது.
57 முதல் 64 வயது வரையில் உள்ளவர்களில் 84 சதவீதம் ஆண்கள் நல்ல உடல் நலம் மற்றும் செக்ஸ் ஈடுபாட்டுடன் இருப்பது கண்டறியப்பட்டது.
70 வயதுகளில் இருப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்குப் பேர் மாதம் இருமுறை செக்ஸ் உறவு வைத்துக் கொள்கின்றனராம். 80 வயதுகளில் இருப்போரும் கூட மாதம் ஒருமுறை உறவு வைத்துக் கொள்கின்றனராம்.
75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் இது 38 சதவீதமாக உள்ளது. வயதானாலும் செக்ஸ் ஆசையில் பெரிய அளவில் குறைவில்லை என்பதே இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.