எங்கே எவ்விதம் தோன்றும்
“ நேற்றுவரை எதுவும் இல்லை. புயலென என் நெஞ்சில் நுழைந்தாய் இன்றுமுதல் நான் நானாய் இல்லை” என்பர் காதல் வயப்பட்டவர்கள். அருகருகே இருந்த போதும் கூட காதலை உணரமுடியாது. ஆனால் சின்ன பிரிவுதான் அந்த காதலை உணர்த்தும். எனக்குரியவளை நான் கண்டுபிடித்துவிட்டேன் என்பதை மனம் எந்த சூழலில் உணரத் தொடங்குகிறதோ அப்பொதுதே நீங்கள் காதல் வயப்பட்டுவிட்டீர்கள் என்பதை உணரலாம்.
ஆயிரம் பார்வையிலே
நம் நேசத்திற்குரியவர் நம்முடைய நேசத்தை புரிந்து கொண்டுள்ளாரா என்பதை எப்படி உணர்ந்து கொள்வது என்பதில் குழப்பம் ஏற்படலாம். கவலை வேண்டாம். ஆயிரக்கணக்கானோர் திரண்டிருக்கும் கூட்டத்திலும், உங்களுக்கானவர் அங்கு இருந்தார் என்றால் அவரை தனியாக இனம் கண்டு கொள்ளலாம். அந்த பார்வை நிச்சயம் உங்களை வந்தடையும். அதனால்தான் கவிஞர்கள் “ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்” என்று பாடி வைத்துள்ளனர்.
காதல் தன்னம்பிக்கை
காதல் என்பது முட்டாள்தனமானது என்பர் அதை உணராதவர். காதல் என்பது எத்தனை உன்னதமானது என்பது உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். சாமன்ய மனிதரையும் சாதிக்கத் தூண்டுவது காதல். காதலை வெளிப்படுத்தும் முறையிலேயே நாம் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். நாம் நேசிக்கும் நபரிடம் நம் உணர்வை வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்றுவிட்டால் போதும் அந்த காதல் நிச்சயம் வெற்றிபெறும் என்கின்றனர் உளவியலாளர்கள்.
காதலுக்கு நட்பு அவசியம்
காதலை வெளிப்படுத்தும் முன் உங்களவரின் நட்பு வட்டத்தை உங்கள் வசமாக்குங்கள். அது மிகப்பெரிய வெற்றிக்கு வழிவகுக்கும். அதே சமயத்தில் உங்கள் காதலை வெளிப்படுத்த யாரையும் தூது போக சொல்லாதீர்கள். வெற்றியோ, தோல்வியோ, ஆமோதிப்போ, அவமானமோ எதையும் நீங்களே ஏற்றுக்கொள்வது காதல் பாடத்தில் முதல் அனுபவம்.
நீங்கள் நீங்களாக இருங்கள்
ஹீரோயிசத்தை வெளிப்படுத்துகிறேன் பேர்வழி என்று எந்த சந்தர்ப்பத்திலும் ஓவர் ஆக்ட் செய்யவேண்டாம். அதுவே தவறாகிவிடும். எனவே எந்த சூழ்நிலையிலும் நீங்கள் நீங்களாவே இருங்கள் அதுவே உங்களவருக்கு உங்களை பிடிக்கக் காரணமாகிவிடும். அப்புறம் என்ன காதல் டூயட் பாடவேண்டியதுதானே.
புன்னகை உதடுகள்
எந்த சூழ்நிலையிலும் மாறாத புன்னகையுடன் இருங்கள் அதுதான் உங்களவருக்கு பிடிக்கும். சிடுமூஞ்சித்தனமான ஆசாமிகளை யாரும் விரும்புவதில்லை. காதலித்தாலும் நட்புச்சூழலில் இருங்கள். உனக்கு நானிருக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்லுங்கள். அதுவே உங்களவருக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய பரிசு.
இதயப் பூர்வமான நம்பிக்கை
காதலுக்கு ஓகே சொல்லியாகிவிட்டதே அப்புறம் என்ன டேட்டிங் போகலாமா என்று கேட்டு அதிர்ச்சியடைய வைக்காதீர்கள். அது மிகப்பெரிய தோல்விக்கு வித்திடும். எனவே முதலில் ஒருவரை ஒருவர் உணர்வு ரீதியாக இதயப் பூர்வமாக புரிந்து கொள்ளுங்கள். பிறகுபாருங்கள் உங்களவரின் இதயத்தில் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்.