ஒருவரை 'விமர்சனம் செய்யும்போது அதை அவரது மனம் புண்படாதவாறு இனிமையுடன் கூறவேண்டும் என்பதையே வள்ளுவர் 'கடிதோச்சி மெல்ல எறிக' என்று கூறியுள்ளார். இனிய உறவுகளுக்கான தாரக மந்திரமாகவும் இதைச் சொல்லலாம். கனி போல இருக்கும் இனிய சொற்களை விடுத்து காய்போல பேச்சுக்களை பேசுவதாலே திசைக்கொருவராக சிதைந்து கடைசியில் யாருமற்றவர்களாக நிற்க நேரிடுகிறது.
அன்பை விதைக்கலாம்
பேச்சு என்பது உறவுகளுக்குள் அன்பை விதைக்க வேண்டும். ஆனால் ஒருசில குடும்பங்களில் உறவை சிதைக்கிறது. எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது, குதர்க்கமாகப் பேசுவது, குத்திக்காட்டுவது, எரிச்சல் வரவழைக்கும்படி பேசுவது என்பது பல தம்பதிகளுக்கு இயல்பான குணமாக இருக்கிறது. அதுவும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட பல ஆண்களுக்கு, 'பெண்கள் நம் அடிமைகள்' என்கிற நினைப்பு இருப்பதால்... பெண்களிடம் கனிவுடனோ, அன்புடனோ பேசுவதே இல்லை. இத்தகையோரிடம் பெண்களுக்கு பயம் ஏற்படுமே தவிர... உன்னதமான அன்பு இருக்கவே முடியாது!
பெண்களும் இதற்கு விதி விலக்கு இல்லை முள் குத்துவது போல் பேசும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் அன்பின் ரகசியம் அறியாதவர்கள். காதலின் மகத்துவம் தெரியாதவர்கள். இயந்திரம் போல் வாழ்க்கை நடத்தும் ஜீவன்கள் இவர்கள்.
இதயங்கள் பேசவேண்டும்
இதயங்கள் பேசிக் கொள்ளாமல் வெறும் உதடுகள் மட்டும் பேசிக் கொண்டால்... விளைவுகள் மோசமாகத்தானே இருக்கும்! பொதுவாகவே கணவன்-மனைவி இருவரிடையேயான உரையாடல்கள், ஆண்டுகள் செல்லச் செல்லக் குறைகின்றன என்றுதான் ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.
பேச வேண்டிய எல்லாவற்றையுமே முதல் சில ஆண்டுகளிலேயே பேசி முடித்து விடுகிறார் களாம். அதற்குப் பின் பேசுவதற்கு பொதுவாக ஏதுமில்லாமல் போகிறது. குடும்பப் பொறுப்புகள், குழந்தைகள் கடமை, சொத்து வாங்குவது, உறவினர்களுடன் பழகுவது, விழாக்களில் கலந்து கொள்வது, முதலீடுகளில் ஈடுபடுவது என்று நடுத்தரப் பருவத்தில் வாழ்க்கை இயந்திரமயமாகிப் போகிறது. அதற்குப் பின் வெறும் பாதுகாப்புக்காகவே இணைந்து வாழ்வதாகச் சொல்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு.
சுவாரஸ்யமான உரையாடல்கள்தான் தம்பதியர்களுக்கிடையே நாளுக்கு நாள் உறவை செம்மைப்படுத்துகின்றன. வீடு, குடும்பம் இவற்றைத் தவிர பிற உலக நடப்புகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தால் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் கிடைக்கும். இசை, இலக்கியம், சினிமா, அரசியல், விளையாட்டு, சமூகம் என்று ஆயிரம் விஷயங்கள் பேசுவதற்கு இருக்கின்றன. ஆனால், அதைப் பற்றி எல்லாம் பேச பெரும்பாலானோருக்கு விருப்பம் இல்லை. இன்கிரிமென்ட் பற்றியும், நகை வாங்குவது பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டு, பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு பேச்சுவார்த்தை என்பதே நாளடைவில் போரடித்துப் போகிறது.
அன்பை புரியவைக்கும் பேச்சு
அளவுக்கு மீறின அன்பு தான் எப்போதும் சந்தேகங்களை உருவாக்கும். எனவே சந்தேக விதை உருவாகாமல் தடுப்பது இருவரின் கடமை. அலுவலகத்தில் இருக்கும் நட்பு வட்டாரத்தை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்வது சிறந்தது. இல்லையென்றால் சாதாரண தொலைபேசி உரையாடல் கூட இருவரின் பிரிவுக்கு காரணமாக அமைந்துவிடும்.
புரிதலின்மையால் தோன்றும் சிக்கல்
புரிதல் என்பது தம்பதியருக்கிடையே இருக்கக் கூடிய மிக முக்கியமான ஒன்று. ஒருவருக்கொருவர் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும்போது பேச்சின் விபரங்களை சரியாக புரிந்து கொண்டாலே பாதி பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம். இன்றைய சூழலில் எதையுமே அரைகுறையாக புரிந்து கொண்டு விடுவதே பிரிவினைக்கு காரணமாகிறது.
வாழ்க்கை இப்படித்தான் செல்ல வேண்டுமா? கணவன் - மனைவி உறவு என்பது வெறும் கடமை போல் ஏன் குறுகி ஒரு கட்டத்தில் அது முறிந்து விடுகிறது.
எனவே மனம் விட்டு பேசுவோம். வீண் மன உளைச்சல்களையும், கண்ணீரையும் தவிர்ப்போம்.