•  

ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு

Pair
 
சென்னை: தனக்கு ஆண்மைக் குறைவு உள்ளதை மறைத்து கல்யாணம் செய்து மோசடி செய்து விட்ட கணவரிடமிருந்து விவாகரத்து வழங்கக் கோரியும், அவர் ரூ. 1 கோடி நிரந்தர பராமரிப்புத் தொகையை தர வேண்டும் என்று கோரியும், அவரது மனைவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 24 வயதாகும் அந்த பெண் இதுதொடர்பாக 2வது குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், எனது கணவருக்கு ஆண்மைக் குறைவு உள்ளது. திருமணத்திற்கு முன்பே இதுகுறித்து அவரது பெற்றோருக்குத் தெரியும். ஆனால் அதை மறைத்து எனக்குத் திருமணம் செய்து வைத்து விட்டனர்.

இந்த ஆண்மைக் குறைவு குறித்து பின்னர்தான் எனக்குத் தெரிய வந்தது. அது சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாத பாரம்பரிய ஆண்மைக் குறைவு பிரச்சினையாகும். தன்னால் உடல் ரீதியாக மனைவியாக வரப் போகிறவரின் ஆசைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்று எனது கணவருக்கும் திருமணத்திற்கு முன்பே தெரியும்.

திருமணத்திற்குப் பின்னர் இது எனக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலும், எனது கணவர் வீட்டிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தேன்.

எனது மாமியார் வரதட்சணை கூடுதலாக தரவில்லை என்று குத்திக் காட்டிப் பேசுவார். எனது பெற்றோருடன் பேச அனுமதிக்க மாட்டார். ஒரு முறை நான் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது எனது மாமனார் ஒளிந்திருந்து பார்த்தார்.

ஒரு முறை எனது கணவர் என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சித்தார். மாமியார் வீட்டினரின் நிர்ப்பந்தம் காரணமாக நான் பார்த்துக் கொண்டிருந்த சாப்ட்வேர் வேலையையும் விட நேரிட்டது.

2008ம் ஆண்டு மே மாதம் எனக்குத் திருமணமானது. அன்று முதல் இதுவரை எனது கணவர் என்னை உடல் ரீதியாக தொடக் கூட இல்லை.கல்யாணம் நடந்து முடிந்த சில நாட்கள் வரை அவர் என்னுடன் படுக்காமல், தனது பெற்றோரை எனக்குத் துணையாக படுக்குமாறு கூறி வந்தார்.

இப்படி ஒரு பக்கம் எனது கணவரின் செயலால் நான் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மறுபக்கம் எனது மாமியார், நாள் முழுவதும் என்னை வேலை வாங்கிக் கொண்டே இருப்பார்.

எனது திருமணத்திற்காக எனது பெற்றோர் ரூ. 11லட்சம் வரை செலவிட்டனர். இதுதவிர 30 பவுன் நகைக, வெள்ளி, வீட்டுப் பாத்திரங்கள் என வாங்கிக் கொடுத்தனர்.

எனக்கு எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் ஏற்பட்ட மன வலி, உடல் கொடுமை, சித்திரவதைகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது.

எனவே என்னை ஏமாற்றி, சித்திரவதை செய்து கொடுமைப்படுத்திய செயலுக்காக எனது கணவர் குடும்பத்தார் ரூ. 1 கோடி நிரந்தர ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும்.

எங்களுக்குள் நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாராயணசாமி, செப்டம்பர் 16ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதற்கிடையே, ஜூலை 4ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் சார்பாக மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரைப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடுமாறும், பெண்ணின் கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடுமாறும் கோரி உயர்நீதிமன்றத்திலும் அந்தப் பெண்ணின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.Story first published: Thursday, August 13, 2009, 11:57 [IST]

Get Notifications from Tamil Indiansutras