கென்ய அரசியல் ஸ்திரமற்றுக் காணப்படுகிறது. அங்கு தற்போது அதிபராக கிபாகி உள்ளாஹர். பிரதமராக லைலா ஒடிங்கா உள்ளார். இருவருக்கும் இடையே எப்போதும் தகராறு நிலவுகிறது.
கடந்த 2008ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்த சண்டை ஒரு வழியாக ஓய்ந்தாலும் கூட தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே பூசல் நிலவியபடியேதான் உள்ளது.
இதனால் வெறுப்படைந்த ஜி 10 என்ற அமைப்பு, ஒரு வார கால செக்ஸ் உறவுப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்த பெண்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த நூதனப் போராட்டத்திற்கு பெண்களிடையே பலத்த வரவேற்பு காணப்பட்டது.
கடந்த வாரத்துடன் இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஏகப்பட்ட ஆண்கள் ஏகமாக டென்ஷன் ஆகி விட்டார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஜேம்ஸ் கிமான்டோ.
ஒரு வார கால செக்ஸ் உறவு நிறுத்தப் போராட்டத்தைக் கண்டித்து அவர் ஜி-10 அமைப்பு மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், ஒரு வார கால செக்ஸ் நிறுத்தப் போராட்டத்தால் நான் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி விட்டேன். பதட்டம் அதிகரித்தது, முதுகு வலி, சரியாக தூங்க முடியாவை என பெரும் வேதனைக்குள்ளாகி விட்டேன்.
இதற்குக் காரணமான ஜி-10 அமைப்பு எனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று தனது வழக்கில் அவர் கூறியுள்ளாராம்.
இந்த வழக்கு குறித்து ஜி-10 அமைப்பில் இடம் பெற்றுள்ள பெண்கள் அமைப்புகளில் ஒன்றான கல்வி, விழிப்புணர்வு உரிமை மையம் என்ற அமைப்பின் இயக்குநர் ஆன் நோகு கூறுகையில், வழக்கு குறித்து கேள்விப்பட்டேன். ஆனால் எங்களுக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை. ஆனால் வரும் என எதிர்பார்க்கிறோம், வரட்டும் பார்க்கலாம்.
தனது நாட்டுக்காக ஒரு வார காலத்திற்கு செக்ஸைக் கூட விட்டுக் கொடுக்க முடியாத அந்த ஆணின் முகத்தைப் பார்க்க நாங்கள் ஆவலோடு இருக்கிறோம்.
இந்த வழக்கு பெரிய விஷயமல்ல. ஆனால் ஜி-10 அமைப்பு நடத்திய போராட்டம் மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது.
இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமரும், அதிபரும் சேர்ந்து பேசியுள்ளனர். நாட்டின் வளர்ச்சி, உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க உறுதி பூண்டுள்ளனர். இது சந்தோஷமான செய்தி என்றார் நோகு.
மேலும், பெண்கள் அமைப்பினர் இணைந்து அதிபரையும், பிரதமரையும் சந்தித்து இணைந்து செயல்படுமாறும் கோரிக்கை வைக்கப் போகின்றனராம்.