கேட்கவே காமடியாக இருக்கிறதா?. ஆனால் உண்மைதான். ஆண்டுக்கு ஆண்டு காதலர் தினத்தன்று பல புதுப்புது 'ஐட்டங்களையும் ஐடியா'க்களையும் இறக்கி விடுவோர், இந்த முறை காதல் மாத்திரையை களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.
அதேபோல காதலில் தோல்வியுற்றவர்களுக்கு அந்த உணர்வுகளை மறைக்கவும் ஒரு மாத்திரை வரப் போகிறதாம்.
இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகையில், விரைவில் காதலில் விழவும், விழுந்து அடிபட்டு காதல் தோல்வியால் அவதிப்படுபவர்களுக்கு அதை மறைக்கவும் மாதிதரைகள் தயாராகி விடும்.
காதல் என்பது இனிமேல் பஸ் பயணம் மாதிரிதான் இருக்கும். ஒரு ஸ்டாப்பில் ஏறி, அடுத்த ஸ்டாப்பில் இறங்கிக் கொள்வது போன்ற நிலை வந்து விடும். அதற்கு இந்த மாத்திரை கை கொடுக்கும் என்கிறார்கள் அவர்கள்.
காதல் என்பது மனித மூளையில் ஏற்படும் ஒரு ரசாயன மாற்றம்தான். இந்த மாற்றத்தைத் தூண்டுவிக்கும் வகையில் மாத்திரைகளை பயன்படுத்தினால் கண்டிப்பாக காதல் உணர்வு தோன்றும். அதேபோல அந்த உணர்வை மரத்துப் போக வைக்க இன்னொரு மாத்திரையும் சாத்தியம்தான் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.
அமெரிக்க நரம்பியல் விஞ்ஞானிகள் இதுகுறித்து கூறுகையில், சரியான கலவையில் உருவாக்கப்படும் இந்த வேதியியல் மாத்திரைகள் நிச்சயம் காதலில் விழவும், காதலிலிருந்து மீளவும் உதவும் என்கிறார்கள்.
அட்லாண்டாவில் உள்ள எமோரி மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லேரி யங் கூறுகையில், மனித மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால்தான் காதல் உணர்வுகள் தோன்றுகின்றன என்பதை நேரடியாக டிவி மூலம் விளக்கும் காலம் வந்து விட்டது.
இதுதொடர்பாக அமெரிக்கா மற்றும் கனடாவில் காணப்படும் எலியைப் போன்ற தோற்றமுடைய பிரெய்ரி வோல்ஸ் விலங்குகளிடம் நாங்கள் சோதனை மேற்கொண்டுள்ளோம். அதில் மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றமே காதல் உணர்வுகளுக்குக் காரணம் என்பது தெரிய வந்தது.
அந்த உணர்வுகளின் பின்னணி குறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறோம்.
ஒரு பெண் பிரெய்ரி வோல் மீது ஹார்மோனை செலுத்தியபோது அது இன்னொரு ஆண் விலங்கின் துணையை நாடியதை நாங்கள் கண்டோம்.
பின்னர் அந்த ஹார்மோன் மூளைக்குப் போவதை தடுத்தபோது, ஆண் துணையின் உதவியை அது நாடவில்லை. மாறாக அது இருக்கும் பக்கம் கூட அது போகவில்லை.
மனித மூளையும் இதேபோலத்தான் செயல்படுகிறது. மூளையை தூண்டுவிக்கும் இந்த வகை ஹார்மோன்கள் உண்மையின் மனிதன் பழக்க வழக்கங்களையும் கூட கட்டுப்படுத்துகிறது, மாற்றுகிறது.
இந்த ஹார்மோன் அதீதமாக செயல்பட்டால் கண்ணோடு கண் பார்த்து அணுகும் தைரியம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படும். காதலில் இது முக்கியமாச்சே.. இதுதான் காதல் உணர்வாக நமக்கு தெரிகிறது என்கிறார் அவர்.
இப்படி மூளையை தூண்ட உதவும் இரு வகையான ரசாயன ஹார்மோன்களை (ஆக்சிடாக்சின் மற்றும் டோபமைன்) தற்போது மாத்திரை வடிவில் மாற்றி புழக்கத்தில் விட்டால், காதல் பழக்கத்திற்கு இது உதவக் கூடிய தோழனாக இருக்கும் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.
இனிமேல் பழக வேண்டும் என யாராவது ஆசைப்பட்டால் கையில் பேப்பரும், பேனாவுமாக உட்கார்ந்து, கடலையும், வானத்தையும் பார்த்து கவிதை பாட வேண்டாம்.
பையில் ஒரு மாத்திரையை எடுத்துப் போட்டுக் கொண்டால் போதும். எந்தப் பெண்ணைப் பிடிக்கிறதோ, டக்கென்று ஒரு மாத்திரையை எடுத்து வாயில் போட்டால் போதும்....