ஒவ்வொரு வெற்றி பெற்ற ஜோடியிடமும் இந்த ரொமான்டிக் தொடுதல்கள் கண்டிப்பாக இருக்கும். சின்னதாக ஒரு அணைப்பு, கன்னத்தில் செல்லமாக ஒரு முத்தம், கைகளைப் பாசத்துடன் பிடித்துக் கொள்வது என சின்ன சின்ன இந்த தொடுதல்கள், காதலர்களுக்குள்ளும், கணவன், மனைவிக்குள்ளும் அன்பை வலுப்படுத்தும், காதல் பெருகச் செய்யும். நெருக்கத்தை அதிகரிக்கும்.
அதிலும் கைகளைப் பிடித்துக் கொள்வது இருக்கிறதே, அதை விட சிறந்த அன்பை வெளிப்படுத்தும் விஷயம் இருக்க முடியாது என்கிறார்கள். காதலனோ, காதலியோ அல்லது கணவனோ, மனைவியோ, ஒருவர் கையை இன்னொருவர் பாசத்துடன் பற்றிக் கொள்ளும்போது, மனதில் பாதுகாப்பான உணர்வு ஏற்படுமாம்.
உனக்கு நான், எனக்கு நீ என்பதை வார்த்தைகளே இல்லாமல் வெளிப்படுத்தும் உணர்வுதான் இந்த கைப்பிடித்தல்.
இதை இங்குதான் செய்ய வேண்டும் என்பதில்லை. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் செய்ய முடியும் என்பது இதில் உள்ள விசேஷம்.
பார்க்கிலோ, பீ்ச்சிலோ, வயதான தம்பதியினர் அன்னியோன்யமாக, கைகளை பரிவுடன் பற்றிக் கொண்டு நடப்பதைப் பார்க்கும் பல இளம் ஜோடிகள், நாமும் ஒருநாள் இப்படித்தான் நடப்போம் என்று நினைக்கலாம். ஆனால் அந்த நினைப்பு வயதானவர்களுக்குத்தான் வர வேண்டும் என்பதில்லை. இளம் வயதிலேயே அந்த பாச உணர்வை நாம் கைக் கொள்ளலாம்.
ஆனால் இன்றைய மெஷின் உலகில் கைகளைப் பரிவுடன் பற்றிக் கொள்வது என்பதே நிறைய பேருக்கு மறந்து போய் விட்டது. கைகளை ஆதரவுடன் பற்றிக் கொள்ளும்போது ஏற்படும் உணர்வுகளை அனுபவித்தால்தான் தெரியும். கிட்டத்தட்ட 'கட்டிப்புடி' வைத்தியம் போலத்தான் இதுவும்.
நாம் உறுதியாக இருக்கிறோம், ஒருவருக்கொருவர் அன்பாக, அனுசரணையாக, காதலுடன் இருக்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்லும் மொழிதான் இந்த கைப்பிடித்தல்.
எப்போதெல்லாம் மனக் கிலேசம், மனச் சோர்வு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் உங்களுக்குப் பிரியமானவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு சில விநாடிகள் இருங்கள். எல்லாமே உங்களிடம் வந்து விட்டதைப் போன்ற உணர்வு ஏற்படுவதை உணர்வீர்கள்.