•  

நான் இருக்கேன்டா செல்லம், கவலைப்படாதே...!

Kamasutra
 
காதலன் காதலியாக இருந்தாலும் சரி, கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, செக்ஸ் மட்டுமே அவர்களுடைய அந்தரங்கமாக இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதையும் தாண்டி பல அருமையான விஷயங்களும் உள்ளன. அவையும் கூட ஒருவர் மீதான இன்னொருவரின் அன்பை அதிகமாக்க, வலுவாக்க உதவும்.. அது என்னவென்று பார்ப்போமா...



உறவு வலுப்பட உடல் ரீதியான உறவு மட்டும் உதவாது. மாறாக, மனங்களின் பிணைப்பும் அவசியம். மன ரீதியான பிணைப்பு அதிகமாகும்போதுதான் உடல் ரீதியான பிணைப்புகளும் வலுப்பெறுகிறது.



காதலனாகட்டும் அல்லது காதலியாகட்டும், கணவனாகட்டும் இல்லை மனைவியாகட்டும், இருவரில் ஒருவர் இன்னலில் இருக்கும்போது ஆதரவுக் கரம் நீட்டும்போது கிடைக்கும் சுகமே அலாதியானது.



சில நேரங்களில் மனைவிக்கு உடல் நலமில்லாமல் போயிருக்கும். அந்த நேரத்தில் ஒரு கணவர் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மனைவிக்கு ஏகமாக இருக்கும். உடல் நலக்குறைவின்போதுதான் கணவர்களிடம் மனைவியர் நிறைய எதிர்பார்ப்பார்கள். அதை சரியாக புரிந்து, உணர்ந்து, தெரிந்து நடந்து கொள்ளும்போதுதான் கணவர் மீது மனைவிக்கு அன்பும், ஆசையும், பற்றும், காதலும் அதிகரிக்கும். இது கணவன் மனைவி என்றில்லை, காதலன் காதலிக்கும் கூட இது பொருந்தும்.



வெறுமனே காதல் பாஷையில் பேசிக் கொள்வது, உறவில் மூழ்கித் திளைப்பது, பணம், பொருளைப் பரிசாக கொடுத்து அசத்துவது மட்டும் தாம்பத்யம் அல்ல, மாறாக ஒருவர் மனதை ஒருவர் அறிந்தும், புரிந்தும் சரிவர நடந்து கொள்வதுதான் உண்மையான தாம்பத்யம்.



மனைவி அல்லது காதலிக்குக் காய்ச்சல் அடிக்கிறதா.. உடனே லீவு போட்டு கூடவே உட்கார்ந்து கவனிக்கும்போது அந்தக் கணவர் அல்லது காதலர் மீது பொங்கும் பாசத்திற்கு அளவே இருக்காது. மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொடுத்து சாப்பிட வைப்பது, இதமாக தலை கோதி விடுவது, காய்ச்சலைக் குறைக்க அவ்வப்போது டெம்பரேச்சரைப் பார்த்து அதற்கேற்றார் போல ஈரத் துணியால் நெற்றியில் ஒற்றி விடுவது, ஆறுதலாக நாலு வார்த்தை பேசுவது, அழகாக கதை சொல்லி தூங்க வைப்பது, தட்டிக் கொடுத்து ஆறுதல் தருவது, நெற்றியிலும், கன்னத்திலும் இதமாக முத்தமிடுவது... இத்யாதி.. இத்யாதிகளைச் செய்யும்போது அந்த கணவன் அல்லது காதலனுக்கு ஏற்படும் நிம்மதியும், திருப்தியும் சொல்லில் வடிக்க முடியாததாக இருக்கும். அதை விட அந்தப் பாசம் நிறைந்த பொறுப்புணர்ச்சியை பெறும் மனைவி அல்லது காதலிக்குக் கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது.



மனைவி அல்லது காதலிக்கு உடல் நலம் குன்றி, வாந்தி எடுத்து அவஸ்தைப்படும்போது அதைத் தாங்கிப் பிடித்து ஆதரவாக மடியில் சாய்த்துக் கொள்ளும் கணவன் அல்லது காதலன், தாய்-தந்தைக்குச் சமமான இடத்தைப் பெறுகிறான். அந்தப் பெண்ணிந் மனதில் ஆழமான இடத்தையும் பெறுவான்.



கணவன் அல்லது காதலனை நம்பி வந்து விட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் கணவன் அல்லது காதலனே தாயுமாகிறான், தந்தையுமாகிறான். அப்படிப்பட்ட சூழலில், தாயினும் சாலப் பரிந்து...அதாவது ஒரு தாய் காட்டும் அன்பை விட பல மடங்கு அன்பு காட்ட வேண்டிய கடமை கணவர் அல்லது காதலனுக்கு உண்டு. அந்தக் கடமையிலிருந்து அவர்கள் தவறும்போது அந்தப் பெண்ணின் மனம் துடிக்கும் துடிப்பு வெளியில் யாருக்கும் தெரியாது. ஆனால் வேதனையின் வெப்பத்தை உணரும்போது உயிர்கள் துடித்துப் போகும், உணர்வுகள் தவித்துப் போகும்.



உங்கள் மனைவி அல்லது காதலியை காமத்துடன் மட்டும் பார்க்காதீ்ர்கள். உங்கள் அன்பான அரவணைப்பையும், பரிவையும், பாசத்தையும் காட்டி அவரை சந்தோஷத்தில் திளைக்க விடுங்கள். கூட இருந்து பார்க்க முடியவில்லையா..அடிக்கடி போன் செய்து, நான் இருக்கிறேன் செல்லம்மா, உன் கூடவே இருக்கிறேன், உன் பக்கத்திலேயே இருக்கிறேன், உன்னுடனேயே இருக்கிறேன், என் நினைவெல்லாம் உன்னுடன்தான், கவலைப்படாதே, தைரியமாக இரு, எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையை ஊட்டுங்கள், அதிலேயே அவர் பாதி குணமடைந்து விடுவார்.



அன்பும், ஆதரவும், பாசமும், பரிவும், அரவணைப்பும்தான் உண்மையான காதல். காமத்திற்கு இங்கு கடைசி இடம்தான். உடல் ரீதியான உறவுகளை விட உள்ளங்களின் கூடல்தான் உண்மையான காதல், உண்மையான அன்பு, உண்மையான தாம்பத்தியமாக இருக்க முடியும்.



என்ன புரிஞ்சுதா...!




English summary
Always love your loved ones and show them how you feel before it's too late. You will never know when they will be gone from your embrace. Today is the day. Love them while they are still here..!
Story first published: Thursday, September 13, 2012, 14:04 [IST]

Get Notifications from Tamil Indiansutras