ஐம்பது வயதில் ஆசை வருமா? என்று கேட்பவர்களுக்கு ஆம் வரும் அதனால் தவறு ஒன்றுமில்லை என்று கூறி நடுத்தர வயதினரின் மனதில் பாலை ஊற்றியுள்ளனர் நிபுணர்கள். ஐம்பதிற்கு மேல் காதல் வருபவர்களுக்கு உற்சாகம் அதிகரிக்குமாம். இளைஞர்களைப் போல உணர்வார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். காதல் நினைவுகளை எவ்வாறு அணையாமல் எரியவைப்பது என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர் படியுங்களேன்.
தம்பதியராக இருக்கும் பட்சத்தில் 50 வயதில் மனைவியின் மீதான காதல் அதிகரிக்கும். ஆனால் மனைவி இறந்து போனாலோ, அல்லது விவாகரத்து போன்றவைகளினால் தனிமையில் இருக்க நேரிட்டாலோ 50 வயதிற்கு மேல் தோன்றும் புதிய காதலை எவ்வாறு உற்சாகமாய் எதிர்கொள்வது என்று தெரிந்து கொள்ளுங்களேன்.
காதல் என்பது எதிர்பாரத தருணத்தில் மனதில் தோன்றும் மின்னல்தான். இத்தனை வயசுக்கு அப்புறமா? என்று வெட்கப்படாதீர்கள். உங்கள் மீது அவருக்கும் விருப்பம் இருக்கிறது என்பதை நீங்கள் உணரநேர்ந்தால் தாமதம் வேண்டாம். நேரிடையாக காதலை தெரிவித்து விடுங்கள். அழகான ரெஸ்டாரெண்ட், அமைதியான பார்க் அல்லது பீச் என்று எங்காவது அழைத்துக் சென்று மனம் திறந்து பேசுங்கள்.
நோய்கள் குணமாகும்
50 வயதாகிவிட்டதே இனிமேல் என்ன என்று சோர்ந்து போகாதீர்கள். இளைஞராய் இருக்கும் போது எந்த மாதிரியான உணர்வுகள் இருந்தனவோ அதே போல மீண்டும் உற்சாகமாய் காதலியுங்கள். உங்களுக்கு ஏதேனும் சின்னச் சின்ன உடல் உபாதைகள் இருந்தால் கூட அதனால் சரியாகிவிடுமாம்.
அழகான பரிசளியுங்கள்
புதிய காதலினை உற்சாகப்படுத்துவதற்கு அவ்வப்போது சின்னச் சின்னதாய் பரிசளியுங்கள். பூக்கள், வாழ்த்து அட்டைகள், என அவ்வப்போது காதலை உணர்த்தும், உறுதிசெய்யும் பரிசுகள் கொடுங்கள். காதலியை முதலில் பார்த்த நாள், காதலியின் பிறந்தநாள், காதலனின் பிறந்தநாள் என அன்பான தருணங்களில் மனம் கவரும் பரிசுகளை தரலாம்.
குதுகலாமாய் காதலியுங்கள்
50 வயதில் எல்லோருக்குமே பொறுப்புகள் இருக்கும். பதவி, குழந்தைகள், சிலருக்கு பேரக்குழந்தைகள் கூட இருப்பார்கள். இந்த வயதில் போய் புதிதாய் என்ன காதல், ரொமான்ஸ் என்று நினைக்க வேண்டாம். வந்துவிட்ட பின்னர் என்ன செய்வது. அதை கட்டுப்படுத்தவோ, அடக்கவோ நினைத்தால்தான் வெடித்துக் கிளம்பும். எனவே அதன் போக்கில் விட்டுவிடுங்கள். யாருக்கும் சிக்கல் இல்லாத வகையில் காதலை சந்தோசமாக கொண்டாடுங்கள் வார விடுமுறை நாளில் சில நாள் அவுட்டிங், டேட்டிங், என ரொமான்ஸ் உணர்வுகளோடு உற்சாகமாய் பொழுதை கழியுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
காதலுக்கும், காதல் உணர்வுகளுக்கும், இறப்பு என்பது கிடையாது. அது எங்கு, எப்போது, யாரிடம் ஏற்படும் என்று கூற இயலாது. சிறுவயதில் தோன்றும் காதல் இனக்கவர்ச்சி என்று கூறுவார்கள். ஆனால் நடுத்தர வயதில் தோன்றும் காதல் பக்குவப்பட்டது. யாரையும் பாதிக்காத வகையில் அந்த காதலை கையாளத் தெரிந்திருக்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.