ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு குகையில் ஒரு ஆணும், பெண்ணும் உடலுறவு கொள்வது போன்ற ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வரையப்பட்டு 28 ஆயிரம் ஆண்டுகள் ஆயிருக்கலாம் என்று தெரிய வந்ததைத் தொடர்ந்தே போர்னோகிராபிக்கு வயது 28 ஆயிரம் ஆண்டுகள் என்று ஆஸ்திரேலிய தொல்பொருள் ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் போர்னோகிராபி என்பது நவீனமான ஒன்றல்ல, மிகவும் பழமையானது என்ற கருத்தும் வலுப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் அர்ன்ஹாம் என்ற பகுதியில் உள்ள குகையில்தான் இந்த ஓவியம் காணப்படுகிறது. இந்தப் பகுதி மனித நடமாட்டமே இல்லாத ஒன்றாகும்.
வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் இந்த ஓவியம் காணப்படுகிறது. மேலும் இதேபோன்ற பல்வேறு ஓவியங்களும் இப்பகுதியில் காணப்படுகின்றன.
இதுகுறித்து தெற்கு குவின்ஸ்லாந்து பல்கலைக்கழக பேராசிரியர் பிரைஸ் பார்க்கர் கூறுகையில், பிரான்ஸில் உள்ள சவாட் குகைகளில் காணப்படும் இதுபோன்ற ஓவியங்களும் பழமை வாய்ந்தவைதான். அவை 30 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று கூறப்படுகிறது. இருப்பினும் அது நிரூபிக்கப்படவில்லை. அதேபோல வடக்கு ஸ்பெயினில் உள்ள இதேபோன்ற படங்கள் 40 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று கூறப்படுகின்றன. அவையும் கூட நிரூபிக்கப்படவில்லை.
ஆனால் ஆஸ்திரேலியாவில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஓவியத்தின் வயது துல்லியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். சுண்ணாம்புக்கல் உள்ளிட்டவற்றால் வரையப்பட்ட ஓவியத்தை வைத்துத்தான் இவற்றின் வயதை துல்லியமாக கணக்கிட்டுள்ளனராம்.
காத்தரின் என்ற இடத்திலிருந்து 90 நிமிடங்கள் ஹெலிகாப்டரில் பயணித்தால் இந்த மலை மற்றும் குகைப் பகுதியை அடைய முடியும். தரை மார்க்கமாக செல்வது மிக மிக கடினம். மிகப் பெரிய மலையின் உள்ளே உள்ள குகையில் இந்த ஓவியம் காணப்படுகிறது. இந்த மலைக்கு நர்வாலா கபர்ன்மாங் என்று பெயரிட்டுள்ளனர். இங்குள்ள குகை முழுவதுமே ஓவியங்களாக காணப்படுகிறது.
தற்போது மிகச் சிறிய அளவிலான ஓவியப் பகுதியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஓவியங்களின் வயது கணக்கிடப்படாமல் உள்ளதாம்.