இரவு நேரத்தில் படுக்கையறையில் தம்பதியர் பேசும் தலையணைப் பேச்சு அவர்களிடையே ஆரோக்கியமான உறவினை மேம்படுத்துகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மெர்ச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இது தொடர்பான ஆய்வு மேற்கொண்டனர். தம்பதியர் உறங்கும் முன்பாக தலையணையில் படுத்துக்கொண்டு உரையாடுவது, அவர்களிடையே ஒருவித பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறதாம். குறிப்பாக தாம்பத்ய உறவிற்கு பிந்தைய இந்த பேச்சு தம்பதியரிடையே பிணைப்பை அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாய் - சேய் ஆரோக்கியம்
இதற்காக 456 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. ஆய்வை மேற்கொண்ட டாக்டர் டேனியல், தம்பதியரின் படுக்கையறைப் பேச்சு உளவியல் ரீதியாக பல நன்மைகளை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக மனைவி கர்ப்பிணியாக இருக்கும் போது படுக்கையறையில் ஆறுதலாக பேசுவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறதாம். இது தாய்க்கும், சேய்க்கும் ஆரோக்கியமானது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தம்பதியரிடையே தாம்பத்ய உறவு என்பது அவசியமானதாக இருந்தாலும் அதையும் தாண்டி இரவுப் பொழுதில் தலையணையில் படுத்தவாறு பேசுவது ஆத்மார்த்தமான உறவை ஏற்படுத்துகிறதாம். எனவே தம்பதியரே தினந்தோறும் பேசுங்கள்.
வெற்றிக்கு அடித்தளம்
ஆண்களுக்கு இடையே உள்ள பணிச்சூழல், அழுத்தம் காரணமாக படுக்கையறையில் பேசுவதை அவர்கள் தவிர்த்து விடுகின்றனர். இருப்பினும் படுக்கையறையில் உரையாடுவது ஆண்களின் வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு உளவியல் தொடர்பான இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.