கலிபோர்னியா பல்கலைகழக உளவியல் துறை பேராசிரியர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 25 பெண்களை தேர்வு செய்தனர். அவர்களின் கையில் லேசாக சூடு வைத்தனர். “ஆ” என அலறித் துடித்த பெண்களிடம் ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த அவர்களது ஆண் நண்பர்களின் படத்தை அந்தந்த பெண்ணிடம் கொடுத்தனர். தனது அன்புக்குரியவரை பார்த்த விநாடியில் பெண்களின் இதழில் புன்னகை தோன்றியது. அவர்களது காயத்தின் வலி தணிந்தது. படத்தை பார்த்ததற்கே இப்படியா என வியந்த ஆய்வாளர்கள் அவரவர் துணையை நேரில் வரவழைத்தனர். அவர்களிடம் லேசாக அணைத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அப்போது உடல் வலியும், மன அழுத்தமும் மறைந்து போனது கண்டறியப்பட்டது. அன்பிற்குரியவர் அணைக்கும் போது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பது கட்டுப்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து கடுமையான உடல் வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை அன்புக்குரியவரின் அணைப்பு விரட்டி விடும் என்ற முடிவுக்கு வந்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மனநல கல்வியாளர் டாக்டர் லுட்விக் லோன்ஸ், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக நீடிக்க, தம்பதியர் குறைந்தபட்சம் தினமும் நான்கு முறையாவது அணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
மாதத்திற்கு 2 முறையாவது கைகோர்த்து வாக்கிங் செல்ல வேண்டும். ஒரு முறையாவது சினிமா, டிராமா என்று செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இப்படி செய்து வந்தால் டாக்டர்களை தேடிச் செல்லாமல், மக்களின் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில் அன்பிற்குரியவரை சந்தித்து ஐ லவ் யூ கூறவைத்தனர். அப்போது அவர்களுக்கு காதல் உணர்வு அதிகரித்ததோடு மன அழுத்தம் பறந்து போனதாம்.