அதிகாரம் வேண்டாம்
எந்த விசயம் என்றாலும் தனக்கேற்றார் போல நடந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கும் ஆண்கள், பெண்ணுக்கும் மனது உண்டு என்பதை அறிந்துகொள்ளவேண்டும். புதியதாக முயற்சிக்கிறேன் என்ற நினைப்பில் எதையாவது செய்யப்போய் பெண்களின் வலிகளையும், துன்பங்களையும் உணராமல் இருந்துவிடுகின்றனர். இதனால் உறவில் விரிசல் ஏற்படுகிறது. எனவே தன்னைப் போல தனது துணைக்கும் விருப்பம் இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவது சிக்கல் ஏற்படாமல் தவிர்க்கலாம் என்கின்றனர் உளவியலாளர்கள்.
மனதை அறிந்து கொள்ளுங்கள்
பெண்களின் மனதை அறிவது கடினம் என்பார்கள். இது தம்பதியரிடையே சரியான கருத்து அல்ல. பெண்களைப் பொருத்தவரை கணவர்தான் அவர்களின் கதாநாயகன். எனவே இருவரும் தங்களின் விருப்பங்களை மனம் விட்டுப் பேசி தேவையானதைப் பெற்றுக்கொள்ளலாம். இதனால் இருவரின் விருப்பு, வெருப்புகளை அறிந்து கொள்ளமுடியும். இருவரும் நட்பாய் இருந்தால் குடும்ப உறவில் விரிசல் எழ வாய்ப்பில்லை. மதிக்கப்படுகிறோம் என்று மனைவியும் மகிழ்ச்சியடைவார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இருநாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படுகிறது. அதேபோல் தம்பதியர் இடையேயும், மனதளவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இருப்பது குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். இது இருமனங்களுக்கு இடையேயான இருக்கத்தை நீக்கும். தன்னை தன் கணவர் புரிந்து கொள்கிறார் என்பதே மனைவியை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும்.
சுதந்திர உணர்வு
திருமணத்திற்கு முன்பு இருந்த குடும்ப சூழ்நிலை வேறு. திருமணத்திற்குப் பின்னர் பிறந்த குடும்பத்தில் இருந்து தனது உறவுகளையும், விருப்பங்களையும் முழுவதுமாக விட்டு விட்டு கணவரின் குடும்பத்திற்குள் வருகின்றனர். அவர்களை அடிமைப் படுத்தாமல் சுதந்திர உணர்வோடு செயல்பட விடுவது பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும்.
கடவுள் தந்த வரம்
ஒரு சிலர் பெண்களை தாம்பத்ய உறவிற்காகவும், குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரம் போலவும் நினைத்து நடத்துவார்கள். இது தவறான நடைமுறை. இதனால் கணவன், மனைவி இருவருமே சந்தோசமாக இருக்க முடியாது. வாழ்க்கைத் துணைவியை கடவுள் தந்த வரம் என நினைத்து அவரை போற்றினால் உங்களின் வாழ்க்கையை வசந்தமாக்குவது நிச்சயம். மனைவியை உங்கள் மனதின் வடிவமாக நினைத்து கொண்டாடுங்கள். அப்புறம் என்ன உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அலை வீசும்.