குழந்தை பருவம், டீன்ஏஜ் பருவம், குழந்தை பெற்றுக் கொள்ளும் பருவம் போல இதுவும் ஒரு பருவம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 'மெனோபாஸ்' என்றால் 'மாதவிடாய் நின்றுவிடும்' என்றுதான் நம்மில் பலருக்கு மேலோட்டமாகத் தெரியுமே தவிர, அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன மாறுதல்கள் நடக்கிறது.... ஏன் மாதவிடாய் நிற்கிறது? என்ற விவரங்கள் பெரும்பாலான பெண்களுக்குத் தெரிவதில்லை.
இரண்டுவகைப் பிரச்சினைகள்
மெனோபாஸ் காலகட்டத்தில் உள்ள பெண்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் இரண்டு வித பிரச்னைகள் ஏற்படும். மனரீதியாக, தாம்பத்யத்தின் மேல் ஒரு வெறுப்பு ஏற்படும். உடல் உறவின் மேல் அச்சம் கொண்டவர்கள் மெனோபாஸ் பருவத்தை தங்களின் விடுதலை காலமாக நினைக்கத் தொடங்குகின்றனர். இதையே சாக்காக வைத்து கணவரிடம் இருந்து விலகத் தொடங்குகின்றனர். இவர்களுக்கு தக்க மருத்துவ ஆலோசனை மூலம் சந்தோஷத்தை உணரச் செய்ய முடியும்.
இன்னொரு விதத்தினர், மனதில் ஆர்வமிருந்தாலும் பல வருடங்களாகி விட்டதால் ஒரே மாதிரியான விதத்தில் தாம்பத்தியம் இருப்பதால் போரடித்துப் போய் சுவாரஸ்யம் காட்ட மாட்டார்கள். இத்தகையவர்களை வருடம் ஒருமுறை வெளியூருக்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்துவதன் மூலம் கடைசி வரைக்கும் சந்தோஷமான தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடச் செய்யலாம்.
வறட்சியினால் பாதிப்பு
மெனோபாஸ் காரணமாக பெண்ணுறுப்பு வறண்டு போவதால் தாம்பத்தியத்தின்போது திடீரென்று பயங்கர வலி ஏற்படும். இதனால் எழும் அச்ச உணர்வு, உறவின் மீது வெறுப்பை ஏற்படுத்தும். கை வலி, கால் வலி என்றால் மருத்துவரிடம் போகிறவர்கள் இதற்கும் மருத்துவரிடம் சென்று தக்க ஆலோசனை பெறுவதில் தவறில்லை.
ஆர்காஸ்மிக் டிஸ்ஃபங்ஷன் எனப்படும் பெண் உச்ச நிலையை அடையாதிருக்கும் பிரச்னை. இது பொதுவாக நிறையப் பெண்களுக்கு ஏற்படுவதுதான். இதனை தவிர்க்க வறட்சியினால் சோர்வுற்றிருக்கும் பெண்ணுறுப்புப் பகுதியில் செயற்கையான வழவழப்புத் தன்மையைத் தருகிற ஜெல் தடவ வேண்டும். சுயமருத்துவம் செய்ய வேண்டாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
வலிகளால் ஆர்வமின்மை
உடல் வலி, மூட்டு வலி என்று சிரமப்படுகிறவர்களுக்கு மனதில்ஆர்வம் இருந்தாலும் வலிகளால் உடலில் ஆர்வம் இருக்காது. இப்படியே ஈடுபடாமல் விடும்போது பெண்ணுறுப்பு சுருங்கிப் போகும். பிறகு, நினைத்தால்கூட தாம்பத்தியத்தில் ஈடுபடவே முடியாமல் போகலாம். இந்த நிலைவரை விடாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.
தாம்பத்தியத்திற்கு முற்றுப்புள்ளியா?
மெனோபாஸ் என்பதைப் பல பெண்கள் தாம்பத்தியத்துக்கான முற்றுப்புள்ளி என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. இது குழந்தைப் பிறப்புக்கான முற்றுப் புள்ளிதானே தவிர, தாம்பத்தியத்திற்கானதல்ல. மெனோபாஸக்குப் பிறகு முன்னைவிடவும் அதிகமாக தாம்பத்திய சந்தோஷத்தை அனுபவிக்கிறவர்களும் உண்டு.
நடைப் பயிற்சி, முறையான யோகா, சரிவிகித உணவு சாப்பிடுவதுபோன்றவை உடலையும் உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும். தவிர எந்த வலியையும் அலட்சியம் செய்யாமல் உடனடியாக உடலுக்குமுக்கியத்துவம் தருவது, முழு உடல் பரிசோதனைகளைச் செய்வது என கடைசி வரையிலும் இயல்பாக இருப்பதே சந்தோஷமான தாம்பத்திற்கான வழிமுறைகள் என்கின்றனர் மருத்துவர்கள்.