பூப்பெய்தும் பருவம் முன் கூட்டியே வந்து விடுவதால், நிறைய பெண் குழந்தைகள் தங்களுக்கு சீக்கிரமாகவே பீரியட்ஸ் வருவதாகக் கூறுகிறார்கள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு சீக்கிரமே பீரியட்ஸ் வருவதால் அவர்களுக்கு மன அழுத்தமும், கவனக் குறைவும் ஏற்படுகின்றன.
பருமனாக இருக்கும் பெண் குழந்தைகள் தினமும் உற்பயிற்சி செய்யும்படியும், கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்குமாறும் டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனென்றால் பருமனான உடல் இருப்பவர்களுக்கு பூப்பெய்வது விரைவில் நடைபெறுவதோடு மட்டுமல்லாமல், கருப்பை நோய், மலட்டுத்தன்மை மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயமும் கூடவே பின் தொடர்ந்து வருவதால்.
இது குறித்து டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனை பெண் பாலு பாலுறுப்பியல் துறை தலைவர் மருத்துவர் சுனிதா மிட்டல் கூறுகையில்,
நகரத்தில் வாழும் இளம் பெண்கள் அதிக கொழுப்புள்ள உணவான சீஸ்( பாலாடைக்கட்டி), பர்கர் போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்வதே இல்லை. இதனால் அவர்களின் ஹார்மோன் சமநிலை மாற்றமடைந்து சீக்கிரமே பீரியட்ஸ் வருகிறது. இது போன்ற பிரச்சனைகளுடன் எங்களிடம் 10 வயது பெண் குழந்தைகள் கூட வருகின்றனர்.
முன்பெல்லாம் பெண்கள் 12 முதல் 14 வயதில் தான் பருவம் அடைந்தனர். சீக்கிரமே பருவம் அடைவது பிரச்சனை இல்லை. ஆனால் அதிக கொழுப்புள்ள உணவு மற்றும் உடற்பயிற்சியின்மையால் கருப்பை நோய், மலட்டுத்தன்மை ஏன் மார்பக புற்றுநோய் கூட வரலாம் என்றார்.
ராக்லேண்ட் மருத்துவமனையின் பெண் பாலுறுப்பியல் துறை தலைவர் மருத்துவர் ஆஷா ஷர்மா கூறியதாவது,
இளம் வயதில் பருவம் அடைவதால் மனரீதியான பாதிப்புகள் ஏற்படும். 10 முதல் 12 வயதுள்ள பெண் குழந்தைகள் பீரியட்ஸ் நேரத்தில் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றி தெரியாதவர்களாக இருப்பார்கள். இதனால் அவர்கள் மற்றவர்கள் எல்லாம் நன்றாக இருக்கையில் தனக்கு மட்டும் ஏன் இவ்வாறெல்லாம் நடக்கின்றது என்று நினைக்கத் துவங்குவார்கள்.
இந்த எண்ணத்தால் மனஅழுத்தம் ஏற்பட்டு அவர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல விரும்பமாட்டார்கள். வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பதால் பருமன் அதிகமாகி மற்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.
ஒரு பெண் குழந்தை பருவம் அடையும்போது தாய் அவளை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளின் உணவு பழக்கவழக்கத்தை கண்காணிக்க வேண்டும். அவர்களை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களுடன் அவர்களுக்கு உடல்ரீதியாக ஏற்படும் மாற்றம் குறித்து பேச வேண்டும் என்கிறார்.
சிறு வயதிலேயே பருவம் அடைவது என்பது மேற்கத்திய நாடுகளில் சாதாரணமான ஒன்று. ஆனால் வாழ்க்கை முறை மாறுதலால் அந்த பிரச்சனை தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர் அனுராதா கபூர் தெரிவித்தார்.