'யர்ஷா கொம்பா' அல்லது 'கீரா ஜர்' என்றழைக்கப்படும் இந்த மூலிகை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பகுதிகளில் இது கள்ளச் சந்தையில் ரகசியமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளிநாட்டினர் சுலபமாக இவற்றை காசு கொடுத்து வாங்குகின்றனர்.
அதேசமயம், குறைந்த விலைக்கு இங்கிருந்து வாங்கி சீன மார்க்கெட்டுகளில் அதிக விலைக்கு சிலர் விற்று வருவதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
இந்த மூலிகைகளை சட்டவிரோதமாக பயிர் செய்து வெளிநாடுகளுக்கு சப்ளை செய்வதற்கென்றே தனி கும்பல் இயங்கி வருவதையும் போலீசார் மோப்பம் பிடித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் ஒரு கும்பலை பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்து 74 கிலோ மூலிகையை பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்கள் இம்மூலிகையை சீனாவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டது தெரியவந்தது.
இவர்களின் மூலம், இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ள மொத்த கும்பலையும் பிடிக்க போலீசார் வியூகம் வகுத்து வருகின்றனர்.
மூலிகை வயாகராவை நேபாளத்திலிருந்து ரகசியமாக இறக்குமதி செய்து இந்தியாவில் பெரிய விலைக்கு விற்கும்ஜோத்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கூறுகையில், நேபாளத்தில் உள்ள ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த சிலருடன் நாங்கள் தொடர்பு வைத்துள்ளோம்.
அவர்கள் எங்களுக்கு கிலோ ரூ. 40,000 முதல் ரூ. 50,000 வரை இந்த மூலிகையை அனுப்புகின்றனர். அதை நாங்கள் இந்தியாவில் கிலோ ரூ. 4 முதல் 5 லட்சம் வரை விற்பனை செய்கிறோம். இந்த விலைக்கு வாங்கவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்றார்.
ஆண்மைக் குறைவை சரி செய்ய இந்த மூலிகை வயாகரா பெரும் உதவியாக இருப்பதாக கூறப்படுகிறது. 40 வயதுக்கு மேற்பட்ட இந்திய ஆண்களில் கிட்டத்தட்ட 52 சதவீதம் பேர் ஆண்மைக் குறைவுடன் உள்ளனராம். ஒட்டுமொத்தமாக இந்திய ஆண்களில் 10 முதல் 15 சதவீதம் வரை ஆண்மைக் குறைவு பிரச்சினை இருக்கிறது. இதனால்தான் இதுபோன்ற மருந்துகளுக்கு எப்போதுமே நல்ல கிராக்கி உள்ளது.
நேபாளத்தில்தான் இந்த யர்ஷா கொம்பா மூலிகை நல்ல தரத்துடன் கிடைக்கிறது. நேபாளம் தவிர சீனா, திபெத், லே, லடாக், ஹஹுல், நந்ததேவி, பித்தோரகர் ஆகிய பகுதிகளிலும் தூய நிலையில் கிடைக்கிறதாம்.
இது மூலிகை வயாகரா என்று அழைக்கப்பட்டாலும் கூட இந்த மருந்து உண்மையில் மூட்டு வலிக்கு நல்ல நிவாரணியாகத் திகழ்கிறது. மேலும் வயோதிகத்தைத் தள்ளிப் போடவும் இது உதவுவதாக கூறப்படுகிறது.