•  

சரி என்ற பதிலை மனைவி சொல்ல வேண்டுமா?

Husband and wife
 
இந்தியாவில் பெண்ணை பெற்ற பெற்றோர்கள் அனைவருக்குமே தங்களுடைய பெண்ணுக்கு சரியான கணவன் அமைய வேண்டுமே என்ற கவலை ஏற்படுவதுண்டு. நல்ல மருமகன் கிடைத்து விட்டாலே அவர்களுக்கு பாதி பாரம் குறைந்து விடுகிறது. மகளின் வாழ்க்கை நன்றாக அமைந்துவிட்டது. இனி கவலை யில்லை என்ற நிம்மதியுடன் காலத்தை கழிக்கத் தொடங்கிவிடுவர். நல்ல மகனாக இருக்கும் எந்த ஒரு ஆண்மகனுமே பெண்ணுக்கு நல்ல கணவனாக இருக்க முடியும்.

ஆண்களைப் பொறுத்தவரை அழகான பெண்ணைத் தான் பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி அல்ல. பெர்சனாலிட்டியுடன் தகுந்த பாதுகாப்பும் அவசியம் என்பதே பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு. நல்ல கணவனாக இருக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பாதுகாப்பு உணர்வு

மனைவி சொல்லே மந்திரம் என்று சொல்லுவார்கள். அதாவது, மனைவி சொல்வதை அப்படியே சில கணவன்மார்கள் கேட்பார்கள். அதனால் தான் அப்படிச் சொன்னார்கள். இதேபோல், கணவன்மார்கள் சொல்வதை அப்படியே அவர்களது மனைவியர் கேட்க வேண்டும் என்றால் அதற்கும் வழிமுறை இருக்கிறது. அன்பாக, எல்லா வகையிலும் பாது காப்பு தரும் உணர்வுடன் ஒரு கணவன் தனது மனைவியிடம் பழகினால் அந்த மனைவி அவன் என்ன சொன்னாலும் கேட்பாள்.

அமைதியும் ஆர்வமும்

அலுவலக வேலை என்றாலும் சரி, பணியை முடித்து விட்டு சாலையில் வரும் போது நடைபெறும் சம்பவம் என்றாலும் சரி உங்களை பாதிக்கும் விசயங்களை, அதே கோபத்தோடு அவற்றை வீட்டிற்கு கொண்டு வராதீர்கள். எதுவென்றாலும் சரி நண்பர்கள் வட்டத்தில் எவ்வாறு நடந்து கொள்வீர்களோ அதே போல வீட்டில் மனைவியடமும் உங்களின் செயல்பாடுகள் அமைந்தால் வெற்றி உங்களுக்கே.

மென்மையான அணுகுமுறை

வாழ்க்கையில் தாம்பத்ய உறவு முக்கிய இடம் பெறுகிறது. அந்த விஷயத்தில் கணவனின் அன்பான அணுகுமுறையைத்தான் ஒரு மனைவி எதிர்பார்க்கிறாள். ஒரு ஆண் தனது செக்ஸ் ஆசையை மனைவியிடம் எளிதில் சொல்லி விடலாம். ஆனால், பெண் அப்படி அல்ல. அவள் வளர்ப்பு முறையே வேறு. இப்படித்தான் எல்லோரிடமும் பழக வேண்டும் என்று சிறுவயது முதலே அவள் சொல்லி சொல்லியே வளர்க்கப் பட்டு இருக்கிறாள். அதனால், நாசூக்காகத் தான் அவள் தனது விருப்பத்தை வெளிப்படுத்த முடியும். இதை ஒவ்வொரு கணவனும் புரிந்து கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.

“இன்னிக்கு வேண்டாம்" என்று மனைவி சொன்னால்கூட கொஞ்சமும் வெறுப்பை அவள் மேல் காண்பிக்கக் கூடாது சரி ... என்று சொல்லிவிட்டு, அவள் அப்படிச் சொல்ல என்ன காரணம் என்பதை மென்மையாக கேளுங்கள். உங்களது அந்த பாசமான கேள்வியே, அவள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் 50 சதவீதம் சரியாக்கிவிடும். அன்புக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.

உறவில் மகிழ்ச்சி:

உறவு விஷயத்தில் உங்கள் அவசரம் மட்டுமே பிரதானமாக இருந்தால் மனைவிக்கு விரக்தி தான் மிஞ்சும். எனக்குப்போய் கணவன் இப்படி அமைந்து விட்டாரே? என்று நாளடைவில் எண்ணத் தொடங்கிவிடுவாள். இதனால் குடும்ப வாழ்க்கையே நரக வேதனையாகிவிடும். எனவே உறவின் போது மென்மையான அணுகுமுறையையே பின்பற்றுங்கள். அவள் விருப்பத்தை கேளுங்கள். ஓரிரு நிமிடங்களில் உறவை முடித்து விட்டு படுத்துத் தூங்கிவிடாதீர்கள். உறவுக்கு பின்னரும் அன்பாக அவளை வருடிவிடுங்கள். ஆதரவாக பேசுங்கள். உறவின் போது அவள் மகிழ்ச்சியாக இருந்தாளா என்பதையும் கேளுங்கள்.

ஈகோ வேண்டாம்

எந்த விஷயத்திலும் ஈகோ பார்க்காதீர்கள். இதைப்போய் நான் அவளிடம் கேட்க வேண்டுமா? என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களுக்காகவே வாழ வந்தவளிடம், நீங்கள் எந்த விஷயத்தையும் சொல்லலாமே! மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே!. எனவே அனைத்து விஷயத்திலுமே உங்கள் மனைவியிடம் அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள். வெளியில் மனைவியுடன் செல்லும்போது அவளை நெருங்கியபடியே செல்லுங்கள். முடிந்தால் அவளது கரத்தை பற்றிக் கொண்டே செல்லுங்கள். இந்த பாதுகாப்பை எல்லா பெண்களுமே கணவனிடம் எதிர்பார்ப்பார்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் வார்த்தைக்கு சரி என்ற பதிலைத் தவிர வேறு எதையும் யோசிக்கமாட்டார் உங்கள் மனைவி. பிறகு தெளிந்த நீரோடை போல வாழ்க்கை தெளிவாக செல்லும்.

English summary
In India many women keep fasts to get a good husband. Even parents of the girl won’t have a peaceful sleep till they feel that their daughter is in the hands of a good man. It is often heard saying that a good son would be a good husband too. But I think a man should be more than just a good son to be an ideal or perfect husband.
Story first published: Thursday, November 17, 2011, 10:33 [IST]

Get Notifications from Tamil Indiansutras