கணவன்மார்கள் எப்படி, எப்படியெல்லாம் மன்னிப்பு கேட்பார்கள் என்று பார்ப்போமா?
மயங்காத பெண்ணையும் மயங்க வைக்கும் மல்லிகைப்பூவை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து சாரி டா செல்லம், ஏதோ கோபத்தில் கத்திவிட்டேன். அதை மனசுல வச்சுகாத சரியா என்று வழிவார்கள்.
நீங்கள் கோபப்பட்டு அந்தப் பக்கமாக திரும்பி உட்கார்ந்திருந்தால் உங்களை சிரிக்க வைப்பதற்காக கோமாளித்தனமான சேட்டைகள் செய்வார்கள். கடைசியில் என்ன தான் முயற்சி செய்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது.
ஒரு அறையில் இருந்து கொண்டு பக்கத்து அறையில் இருக்கும் மனைவிக்கு சாரி என்று கூறி எஸ்.எம்.எஸ். அனுப்புவது. அது பலிக்காவிட்டால் அருகில் வந்து அமர்ந்து கண்ணே, மணியே என்று கொஞ்சுவது. நம்ம பெண்களும் லேசில்லை. திட்டிட்டு கொஞ்சவா செய்ற, இன்னும் கொஞ்ச நேரம் கெஞ்ச விடுவோம் என்று ஜம்பமாக இருப்பார்கள்.
சில கணவன்மார்கள் சண்டைபோட்டால் மனைவி அருகில் அமர்ந்து முதலில் கையைத் தொடுவார்கள். உடனே மனைவி கோபம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கையை வெடுக்கென்று எடுத்துவிடுவார்கள். சரி என்ன செய்யவென்று அவர்கள் தோளில் கையைப் போட்டு அணைத்து மன்னித்துக் கொள் என்று மன்னிப்புக் கேட்பார்கள். அப்ப தான் சில பெண்களுக்கு உச்சி குளிரும்.
இன்னைக்கு வீட்டில் சமைக்க வேண்டாம். வா, வெளியே போய் சாப்பிட்டுட்டு வரலாம் என்று அழைத்துச் செல்வார்கள். அங்கு மனைவிக்கு பிடிக்கும் ஐட்டங்கள் வாங்கிக் கொடுத்து அசத்துவார்கள். உடனே மனைவி அசராமல் இருந்துவிடுவாரா என்ன?
என்னங்க அடுத்த முறை சண்டைபோட்டா இதே மாதிரி வெளியே கூட்டிட்டு வந்து நான் விரும்பியதை வாங்கித் தருவீர்களா என்று சில மனைவிகள் வாய்விட்டுக் கேட்டுவிடுவார்கள். இதென்னடா வம்பா போச்சுன்னு ஆண்கள் திரு திருவென்று முழிப்பார்களே அப்போது அவர்கள் முகத்தைப் பார்க்க வேண்டும்.
கணவன், மனைவி உறவு என்பது தான் எவ்வளவு மிகவும் அழகானது. சண்டை நடந்தாலும் அழகு, சமாதானம் ஆனாலும் அழகு. திருமண வாழ்க்கையை அழகாக வைத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. என்ன உங்கள் வாழ்வை அழகாக வைத்துக் கொள்வீர்களா?