பிறரின் தயவை நாடும் முதியவர்கள்
வாழ்க்கையின் கடைக்கோடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் முதியவர்கள் குழந்தைகளுக்கு சமமானவர்கள். தாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளின் வாழ்விற்காக எண்ணற்ற தியாகங்களை செய்து அவர்களை ஆளாக்கி விட்டு கடைசி காலத்தில் அந்த பிள்ளைகளின் தயவினை எதிர்பார்த்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர் முதியவர்கள்.
எஞ்சிய காலத்தில் பிறரை எதிர்பார்க்க வேண்டியதாலேயே எண்ணற்ற துயரங்களுக்கு அவர்கள் ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஹெல் ஏஜ் இந்தியா எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் படி 63 சதவிகிதம் முதியவர்கள் மருமகள்களால் கொடுமைப்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. 44 சதவிகிதம் பேர் மகன்களின் கொடுமைக்கு ஆளாவதும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கொடுமைக்கு ஆளாகும் முதியோர்களில் 52 சதவீதம் பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். 66 சதவீதம் பேர் பொருளாதார ரீதியாக தங்கள் குடும்பத்தினரைச் சார்ந்து வாழ்கிறார்கள். பெரும்பாலானோர் தங்கள் அன்றாட செயல்பாடுகளுக்கு மருமகள்களையே நம்பியுள்ளனர். 85 சதவீதம் பேர் மருத்துவச் செலவுகளுக்கு மற்றவர்களை எதிர்பார்த்து வாழ்கின்றனர்.
நாட்டின் தலைநகரில் நூறு சதவிகித பாதிப்பு
நாட்டின் தலைநகரான புதுதில்லியில் அனைத்து முதியவர்களும் தங்கள் மருமகளின் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வின் போது தெரிவித்தனர். அதாவது 100 சதவீதம் பேர் தங்கள் மருமகள்களால் கொடுமைக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் தங்களுக்கு எதிரான கொடுமை அதிகரித்திருப்பதாக 41 சதவீத முதியோர் தெரிவித்துள்ளனர். தாங்கள் மென்மையான இலக்காக இருப்பதே இதற்குக் காரணம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சென்னையில் இரண்டு சதவிகிதம்
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 9 கோடி பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய மருமகள் அல்லது மகன்களால் கொடுமைக்கு ஆளாகின்றனர். நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் சுமார் 64.3 சதவீத வழக்குகள் மருமகளின் கொடுமை காரணமாகவே பதியப்பட்டுள்ளன. அதில் பெங்களூரில்தான் அதிகப்படியான மருமகள் கொடுமை நடைபெற்றுள்ளது. ஐதராபாத் நகரில் 38 சதவிகிதம் பேரும் போபாலில் 30 சதவிகிதம் பேரும், கொல்கத்தாவில் 23 சதவிகிதத்தினரும், சென்னையில் குறைந்த அளவாக 2 சதவிகிதத்தினரும் கொடுமைக்கு ஆளாகின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 72 சதவிகித முதியவர்கள் தங்களின் மகன்களின் வீட்டில் வசிக்கின்றனர். இதில் மும்பையில் மட்டும் அதிக அளவாக 86 சதவிகிதம் பேர் வசிக்கின்றனர். சென்னையில் 22 சதவிகித முதியவர்கள் தங்களின் மகள்களின் வீட்டில் வசித்துவருகின்றனர்.
முதியோருக்கு எதிரான கொடுமை என்பது மனதைக் காயப்படுத்தும் விதமாகப் பேசுவது மட்டுமின்றி உடல் ரீதியாகக் காயப்படுத்துவதும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் முதியோர்களை சமூக, பொருளாதார, உடல்நல ரீதியாகக் காப்பாற்றுவது அவசியம் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. என்னதான் துன்பத்திற்கு ஆளானாலும் 98 சதவிகித முதியவர்கள் தங்களின் துயரம் குறித்து காவல்துறையில் புகார் தெரிவித்ததில்லை என்பதே நெகிழ்ச்சியான உண்மை. எனவே மற்றொரு பிள்ளைகளாக கருதவேண்டிய மூத்தவர்களை பாரமாக எண்ணாமல் அவர்களை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்பதையே உணர்த்துகிறது இந்த ஆய்வு முடிவு.