டெல்லியில் நடந்த உலக மக்கள் தொகை தினத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், நமது நாட்டில் நகர்ப்புறப் பெண்கள் சற்று தாமதமாகவே கல்யாணம் செய்ய விரும்புகின்றனர். ஆனால் கிராமப் புறங்களில் 16 முதல் 18 வயதுக்குள் கல்யாணத்தை முடித்து விடுகின்றனர்.
ஆனால் டீன் ஏஜில் கல்யாணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். கல்யாணங்களை சற்று தாமதமாக செய்தால், மக்கள் தொகைப் பெருக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.
தற்போது 18 வயதுக்குள் கல்யாணம் செய்யக் கூடாது என்று சட்டம் உள்ளால் அதை மதிக்கும் வகையில் 18 வயது வரை காத்திருக்கிறார்கள் கிராமப்புறத்து பெற்றோர்கள். தங்களது மகளுக்கு 18 வயது ஆனவுடன் அவர்கள் கல்யாணம் செய்து வைத்து விடுகின்றனர்.
ஆனால் 30, 31 வயதில் திருமணம் செய்து கொள்வது குறித்து யோசிக்க வேண்டும். இப்படித் தாமதமாக திருமணம் செய்வதால் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் குறைக்க முடியும்.
அதற்காக திருமணத்திற்கான தகுதி வயதை 30 என ஆக்க வேண்டும் என நான் கூற வரவில்லை.
நகரங்களில் வசிப்பது, வசதி வாய்ப்புகள், பொருளாதாரம், உயர் கல்வி உள்ளிட்டவற்றின் மூலம் சிறிய குடும்பத்தை அமைத்துக் கொள்வது குறித்த சிந்தனை நமது இளைஞர்களிடமும், இளம் பெண்களிடமும் உள்ளது. இருப்பினும் இதன் மூலம் மட்டும் மக்கள் தொகைப் பெருக்கத்தை குறைத்து விட முடியாது. ஒட்டுமொத்தமாக மன நிலையில் மாற்றம் வர வேண்டும்.
மக்கள் தொகைப் பெருக்கத்தால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இயற்கை வளத்திற்குப் பாதிப்பு ஏற்படுகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது. வெளிநாடுகளி்ல கூட நம்மவர்கள் அதிகரித்து விட்டதால் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நமது நாட்டினரை திரும்ப அனுப்ப ஆரம்பித்துள்ளனர்.
நக்சலைட்டுகள் பெருக்கத்திற்கும் மக்கள் தொகைப் பெருகியதே காரணம்.
மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மீடியாக்கள், அதிகார வர்க்கத்தினர், மக்கள் பிரதிநிதிகள், மக்களிடையே, குறிப்பாக ஊரகப் பகுதி மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
அடிமட்ட அளவிலிருந்து குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வும், அதன் முக்கியத்துவம் குறித்தும் கொண்டு செல்ல வேண்டும்.
தற்போது ஊரகப் பகுதிகளில் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சைகளை செய்து கொள்ள முன்வருவோருக்கு ஊக்கத் தொகை தரப்படுகிறது. அது மட்டும் போதாது, அதிக அளவிலான மக்கள் இந்த அறுவைச் சிகிச்சைக்கு முன்வருவதை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும் என்றார் ஆசாத்.
நிகழ்ச்சியில், தனது வீட்டினர் திருமணம் செய்து வைக்க முயன்றபோது அதை மறுத்து துணிச்சலுடன் போராடிய 12 வயது சிறுமி ரேகா கலிந்தி என்பவருக்கு ஆசாத் பரிசு கொடுத்துப் பாராட்டினார்.