•  

ஐடி ஆண்களிடம் அதிகரிக்கும் மலட்டுத்தனம்

IT Jobs
 
சென்னை: ஆண்களிடையே குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களிடையே மலட்டுத்தன்மை அதிகரித்து வருவதாக சென்னையில் நடந்த பாலியல் மருத்துவ மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய பாலியல் மருத்துவ நிறுவனம் மற்றும் ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் சார்பில் ஆண்டு தோறும் சர்வதேச பாலியல் மருத்துவ மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு 4-வது மாநாடு சென்னை வடபழனி கிரீன் பார்க் ஓட்டலில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

மாநாட்டை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். டாக்டர் ராஜமோகன் தலைமை தாங்கினார்.

பேராசிரியர் டாக்டர் காமராஜ் மாநாட்டில் விவாதிக்கப்படும் பாலியல் பிரச்சினைகள் பற்றி விளக்கிப் பேசினார். முன்னாள் சர்வதேச பாலியல் மருத்துவ சங்க தலைவர் டாக்டர் அடைக்கண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

டாக்டர்கள் எம்.ஏ.கலாம், ஜார்ஜி காக்கடஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். டாக்டர் கருணாநிதி வரவேற்றார்.

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக ஆண்-பெண்களின் பாலியல் விருப்பங்கள் பற்றி டாக்டர் விதால் பிரபு பேசினார்.

அவர் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது ஆண்-பெண்களிடம் பாலியல் பற்றி நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. பாலியல் விழிப்புணர்வு அதிகாரித்தால் பாலியல் தொடர்பான வன்முறைகள் குறையும் என்றார்.

மாநாட்டில் பாலியல் பிரச்சினைகளை தீர்ப்பது பற்றியும், பாலியல் குறைபாட்டை போக்கும் நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. மேலும் அறிவியல் பூர்வமான செக்ஸ் சந்தேகங்களுக்கு சர்வதேச பாலியல் நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.

முன்னதாக மாநாடு குறித்து டாக்டர் காமராஜ் பேசுகையில்,

சர்வதேச அளவில் பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மாநாடு ஆண்டு தோறும் சென்னையில் நடத்தப்படுகிறது. இன்று நடந்த மாநாட்டில் 600-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சர்வதேச பாலியல் நிபுணர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.

பாலியல் மருத்துவத்தில் தற்போது பல மடங்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

60 வயதான பெண்கள் கூட நவீன சிகிச்சை முறைகள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். எங்களது ஆகாஷ் மருத்துவமனையில் நவீன மருத்துவ சிகிச்சை மூலம் 55 வயதான பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறந்தது.

இதே போல் தற்போதைய நவீன மருத்துவ சிகிச்சை மூலம் பல்வேறு சாதனைகள் உலகம் முழுவதிலும் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

அந்த சாதனைகள் பற்றியும் இங்குள்ள டாக்டர்களிடம் சர்வதேச பாலியல் மருத்துவ நிபுணர்கள் பகிர்ந்து கொண்டனர்.

பாலியல் விழிப்புணர்வு மூலம் ஆண்-பெண்களிடம் ஏற்படும் குறைபாடுகளை தொடக்கத்திலேயே குணமாக்க முடியும்.

சமீபகாலமாக ஆண்களிடம் பாலியல் குறைபாடு அதிகரித்துள்ளது. அதிலும் தகவல் தொழில் நுட்ப துறையில் பணியாற்றும் ஆண்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சிகிச்சை முறைகள் பற்றியும் மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

பாலியல் பிரச்சினைகளால் தற்போது நம் நாட்டில் விவகாரத்து பெருகி வருகிறது. இதை தடுக்க இம்மாநாட்டில் திருமணத்துக்கு முந்தைய ஆலோசனை வழங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது.

சமீபகாலமாக உலகம் முழுவதிலும் ஓரின சேர்க்கை கலாசாரம் பெருகி வருகிறது. இப்படிப்பட்டவர்களிடம் பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தவறான பழக்க வழக்கங்களை எளிதில் தடுக்க முடியும்.

மாநாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள் எவை எவை என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு பாலியல் கல்வி அளித்தால் பாலியல் வன்முறைகளை தடுக்க முடியும் என்றார்.

பெருமளவிலான மாணவ, மாணவியரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

பல்வேறு செக்ஸ் பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வு குறித்தும் அறிவியல் பூர்வமான விளக்கக் காட்சிகளும் மாநாட்டின்போது காட்டப்பட்டன.

ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மைய இயக்குனர் டாக்டர் கே.எஸ்.ஜெயராணி நன்றி கூறினார்.

மாநாட்டுக்கு முன்னதாக இன்று காலை சென்னை மெரீனா கடற்கரையில், பாலியல் மருத்துவ நிறுவனம் சார்பில் காதலர் தினத்தையொட்டி மாரத்தான் ஓட்டம் நடந்தது.

மேயர் மா.சுப்ரமணியம் தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில், நடிகர் லாரன்ஸ் உள்ளிட்டோரும், ஏராளமான காதல் ஜோடிகளும் கலந்து கொண்டனர்.

Story first published: Saturday, February 14, 2009, 16:01 [IST]

Get Notifications from Tamil Indiansutras