காதலில் விழும்போது அது நல்லதா அல்லது கெட்டதா என்பது நமக்குத் தெரிவதில்லை. காதல் வேகத்தில் இருவருமே அடித்துச் செல்லப்படுவார்கள். காதல் மட்டுமே கண்ணில் தெரியும். அதன் விளைவுகள், அதன் போக்கு பலருக்கும் தெரிவதில்லை.
நாம் கொண்ட காதல் சரியா, தவறா என்பது கூட பலருக்குப் புரிவதில்லை. புரிந்து கொள்ளவும் பலர் முயல்வதில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் இது சரியா, தவறா என்ற யோசனை பலரையும் தாக்குகிறது. அப்போதுதான் அதைப் பற்றி யோசனைக்கே அவர்கள் போகிறார்கள்.
இது நல்லதா, கெட்டதா என்ற சீரியஸான சிந்தனைக்கு பலரும் அப்போதுதான் வருகிறார்கள். மோசமான உறவுக்கு சில அறிகுறிகளை நாம் காண முடியும். அதுகுறித்த ஒரு பார்வை...

சுயநலம்
இருவரில் ஒருவர் சுயநலமாக இருந்தாலோ அல்லது தம் நலம் பற்றி சிந்திக்க ஆரம்பித்தாலோ அந்த உறவில் நிச்சயம் விரிசல் வரும். எப்போது பார்த்தாலும் தங்களது பாதுகாப்பு, தங்களது நலம், தங்களது சந்தோஷத்தைப் பற்றி மட்டுமே பார்ட்னர்களில் ஒருவர் பேச ஆரம்பித்தாலோ அல்லது நினைக்க ஆரம்பித்தாலோ அந்த உறவு நிச்சயம் உலர ஆரம்பிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆதிக்கம் செலுத்துவது
பெரும்பாலான பெண்கள், தங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஆண்களையே விரும்புவார்கள். இருப்பினும் ஒரு கட்டத்தில் அதை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். நீ என்ன என்னைக் கட்டுபடுத்துவது, நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என்ற நிலைக்குப் போய் விடுகிறார்கள். இப்படிப்பட்ட உறவுகளும் நீடித்ததாக சரித்திரம் இல்லை.

மதிக்கத் தவறுவது
இருவரில் ஒருவர் மற்றவர் மீதான மதிப்பீடுகளை மாற்றும்போதோ அல்லது குறைத்து மதிப்பிடும்போதோ சிக்கல்கள் வரும். காதலனுக்காக காதலியோ அல்லது காதலிக்காக காதலனோ பல தியாகங்களைச் செய்திருக்கலாம் அல்லது பல நல்ல விஷயங்களைச் செய்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் மறந்து விட்டு அதை உதாசீனப்படுத்துவது போல யாராவது ஒருவர் நடக்க முயன்றாலும் அங்கு உறவு உதறலெடுக்கும்.

அடக்குமுறை
காதலன் அல்லது காதலி, மற்றவர் மீது அடக்குமுறையைக் கையாளுவது, கடுமையாக நடந்து கொள்வது, உடல் ரீதியாக கட்டுப்படுத்தப் பார்ப்பது, அடிப்பது போன்றவற்றாலும் கூட உறவுகள் கசந்து போக வாய்ப்புள்ளது. யாருடன் பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும், எப்படி டிரஸ் பண்ண வேண்டும் என்பது முதல் பல விஷயங்கள் வரை காதலனோ அல்லது காதலியோ டிக்டேட் செய்ய ஆரம்பித்தாலும் கூட சிக்கல்கள் வரும்.

பல உறவுகள்.. முறிவுக்கு ஒரே காரணம்
இப்படிப்பட்ட சூழலையும் இன்று பலர் சந்திக்கிறார்கள். அதாவது பலரைக் காதலித்த அனுபவம் அவர்களுக்கு இருக்கும். இருப்பினும் ஒவ்வொருவரையும் ஏதாவது ஒரு சாதாரண காரணத்திற்காக உதறி விட்டு அடுத்த பெண்ணைப் பார்க்க ஆரம்பிப்பார்கள். இப்படிப்பட்டவர்களாலும் கூட உறவுகள் முறியுமாம்.
காதல் நல்ல விஷயம்தான். இருப்பினும் தவறான நேரத்தில், தவறான முறையில், தவறான போக்கில் அது வரும்போதுதான் சிக்கலாகி விடுகிறது.
எனவே பார்த்துக் காதலியுங்கள்...!