•  

ஆடி மாசம் ஜோடி சேருவது நல்லதில்லையாம்!

Sex
 
ஆடிமாதம் வந்தாலே புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு ஆகாதமாதமாகிவிடும். வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒன்று சேர்ந்து புதுமணத்தம்பதிகளை பிரித்து பெண்ணை அம்மாவீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். ஒரு மாதத்திற்கு தனிபடுக்கைதான். காலம்காலமாக நடந்து வரும் இந்த பழக்கம் சமூகரீதியாக மட்டுமின்றி அறிவியல்ரீதியாகவும் நன்மை தரக்கூடியதுதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.



அம்மன் மாதம்



தமிழில் ஆடி என்று மலையாளத்தில் கார்கிடகா என்றும் அழைக்கப்படும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் பெரும்பாலான திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இந்த சமயத்தில் வீட்டில் உள்ள இளசுகள் இணைந்திருப்பது அந்தளவிற்கு உகந்ததல்ல என்பது பழங்கால நம்பிக்கையாகும். இறைவனை பிரார்த்திக்க மட்டுமே உகந்த மாதத்தில் தாம்பத்ய உறவு ஏற்றதல்ல என்கின்றனர் முன்னோர்கள். அதனால் பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுகின்றனர்.



ஆடிமாதம் பிறப்பதற்கு முதல்நாள் புதுமணத்தம்பதியர்களுக்கு சீர் கொடுத்த பெண்ணின் பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்து புத்தாடையும், நகையும் கொடுத்து அணியச் சொல்கின்றனர். விருந்து உபசாரம் முடிந்த பின்னர் பெண்ணை விட்டுவிட்டு மாப்பிள்ளை தன்னுடைய வீட்டிற்கு சென்று விடுகிறார்.



ஆயுர்வேதம் சொல்லும் உண்மை



ஆடிமாதம் பலம் குன்றியமாதமாக ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த மாதத்தில்தான் பருவமழை தொடங்கும். தண்ணீரின் மூலமும் காற்றின் மூலமும் ஏகப்பட்ட நோய்கள் பரவும். இந்த சமயத்தில் புதுமணத்தம்பதிகள் இணைய நேரிட்டால் கருவில் உதிக்கும் குழந்தைக்கு எளிதில் நோய் தாக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. எனவேதான் இந்த மாதத்தில் இணைவதற்கு தடை விதித்து இறைவழிபாட்டிற்குரிய மாதமாக கொண்டாடி வருகின்றனர்.



சூரியனின் நகர்வு



ஆடி மாதம் தட்சனயண தொடக்கக் காலமாகும். வடக்கு திசையில் இருந்து தெற்கு திசை நோக்கி சூரியனின் பயணம் தொடங்கும். இந்தகால கட்டதில் சூரியனை வணங்கி தியானத்தில் ஈடுபடவேண்டும் என்றும் கூறுகின்றனர். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம். மேலும் ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களை இந்த மாதத்தில் வாசிப்பது நல்லது என்கின்றனர் முன்னோர்கள்.



ஆடிமாதம் விவசாயத்திற்கு ஏற்ற மாதம். குளம், குட்டைகள் நிரம்பி வழியுமாம். அப்பொழுது விவசாயத்தை தவிர வேறு எதிலும் கவனம் திரும்பிவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த பிரித்து வைக்கும் சடங்கினை ஏற்படுத்தியிருக்கலாம் என்கின்றனர்.



சித்திரையில் குழந்தை



ஆடியில் கூடினால் சித்திரையில் குழந்தை பிறக்கும் என்பார்கள். சித்திரைமாதம் அதிக வெப்பமான மாதம். இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு எளிதில் சின்னம்மை போன்ற வெப்பநோய்கள் தாக்கும். அடிக்கடி நோய்வாய்படும் என்பதால்தான் ‘சித்திரையில் குழந்தை பிறந்தால் சீரழியும்' என்ற சொல்வழக்கு உள்ளது. இதை காரணமாகக்கொண்டுதான் ஆடிமாதம் தம்பதியர் உறவில் ஈடுபடுவது நல்லதல்ல என்கின்றனர்.



செக்ஸ் என்பது மனிதவாழ்வின் ஒரு அங்கம். இது இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது. ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைவரும் பாடுபடுகின்றனர். எனவே ஆடி மாத உறவு என்பது பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்ற காரணத்திற்காகவே தம்பதியரை பிரித்து வைக்கின்றனர் என்று நிரூபித்துள்ளனர் ஆய்வாளர்கள்.




English summary
Culture in South India prohibits the new couple from having sex during the month of Aadi(July- August). This traditional practice has many social and scientific implications.
Story first published: Tuesday, July 17, 2012, 16:07 [IST]

Get Notifications from Tamil Indiansutras