ஆசியர்களுக்கு செக்ஸ் பற்றித் தெரியவில்லையாம்-பாடம் நடத்தும் நியூசி. கல்லூரி!

Sex Education
 
ஆக்லாந்து: ஆசியர்களுக்கு செக்ஸ் குறித்த அறிவு போதாது என்று கூறி நியூசிலாந்து பிசினஸ் கல்லூரி ஒன்று செக்ஸ் கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இது தேவையில்லாமல் பாலியல் உணர்வுகளைத் தூண்டுவதாக உள்ளதாக கூறி ஆசிய மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த கூத்தை அமல்படுத்தப் போகும் கல்லூரி ஆக்லாந்தில் உள்ள கான்கார்டியா வர்த்தக கல்லூரியாகும். அங்கு அடுத்த ஆண்டு முதல் ஆசிய மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை தற்போது அங்கு படித்து வரும் 450 ஆசிய மாணவர்களும் படித்தாக வேண்டும்.

இந்தக் கல்வி மூலம் செக்ஸ் குறித்த போதிய அறிவை ஆசிய மாணவர்கள் பெறுவார்கள். இதனால் தேவையில்லாத கர்ப்பத்தைத் தவிர்க்க முடியும் என்று அந்தக் கல்லூரியின் இயக்குநரான ஐசக் புவா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆசியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு செக்ஸ் குறித்த அறிவு போதுமானதாக இல்லை. குறிப்பாக செக்ஸ் குறித்த உண்மை அவர்களுக்குத் தெரியவில்லை. ஆசிய நாடுகளில் முறையான செக்ஸ் கல்வி திட்டம் இல்லாததே இதற்குக் காரணம். இந்த நாடுகளில் செக்ஸ் என்பது ஒரு வெட்கப்படும் விஷயமாகவே இருக்கிறது. அதுகுறித்து பேசுவது தவறாக பார்க்கப்படுகிறது.

ஆனால் செக்ஸ் குறித்த போதிய அறிவு இல்லாமல் இருப்பதுதான் உண்மையில் ஆபத்தானதாகும் என்றார்.

ஆனால் இதற்கு ஆசிய மாணவர்களிடையே கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளது. குறிப்பாக மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கல்வியாக இது இல்லாமல் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டி விடுவது போல உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கிடையே, ஆசியாவைச் சேர்ந்த மாணவிகள் கர்ப்பமாவது அதிகரித்து வருவதாக நியூசிலாந்து நாட்டின் கருத்தடை கண்காணிப்பு கமிட்டி தெரிவித்துள்ளது. 2008ம் ஆண்டில் கருத்தரிப்பு செய்த 17 ஆயிரத்து 940 பேரில், 2875 பேர் ஆசிய மாணவிகளாம்.

Please Wait while comments are loading...