நெதர்லாந்து பள்ளிக் குழந்தைகளுக்கு ஓரினச் சேர்க்கை குறித்த பாடம்

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் பள்ளிப் பாடத்திட்டத்தில் ஓரினச் சேர்க்கை குறித்த பாடம் சேர்க்கப்படவுள்ளது.

நெதர்லாந்து நாட்டுக்கான பள்ளிப் புத்தகங்களை அச்சடிக்கும் மிகப் பெரிய பப்ளிஷிங் நிறுவனமான நூர்தாப் இதற்கான திட்டத்தை வகுத்துள்ளது. ஆண் பெண் ஓரினச் சேர்க்கை குறித்து இந்தப் பாடத் திட்டத்தில் இடம் பெறவுள்ளது.

மேலும் இதுதொடர்பான கேள்வி பதில்கள், ஆசிரியர்களுக்கான கையேடு உள்ளிட்டவற்றையும் அது தயாரிக்கவுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநர் கிரிஜன்ஹாட் கூறுகையில், உயிரியல், வரலாறு போல ஓரினச் சேர்க்கை குறித்தும் குழந்தைகளுக்கு முறையாக கற்றுத் தரப்பட வேண்டியது அவசியமாகும். தற்போதைய பாடத் திட்டங்களில், தாய், தந்தை குறித்து மட்டுமே நாம் போதிக்கிறோம். அதையும் தாண்டி ஓரினச் சேர்க்கையாளர்களின் சமூக அந்தஸ்து உள்ளிட்டவற்றையும் கற்றுத் தரப் போகிறோம்.

தற்போது ஒரே பாலினத்தைக் கொண்டவர்கள் ஜோடிகளாக வாழ்க்கை நடத்துவது சகஜமாகி விட்டது. அவர்களைப் பார்க்கும் குழந்தைகளுக்கு மனதில் குழப்பம் ஏற்படலாம். தாய், தந்தை என்ற இலக்கணத்தைப் பற்றி மட்டுமே அவர்கள் படிப்பதால் வரும் குழப்பம் இது. இதையடுத்தே ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்தும் பாடத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளோம்.

முதலில் ஆன்லைனில் இதை அறிமுகப்படுத்தவுள்ளோம். பின்னர் புத்தகங்களாக இவை வெளியாகும். அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என கருதுகிறோம் என்றார் அவர்.

உலகிலேயே முதன் முதலில் நெதர்லாந்தில்தான் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஓரின சேர்க்கை தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாடப் புத்தகம் வரை ஓரினச் சேர்க்கை வர ஆரம்பித்துள்ளது.

நெதர்லாந்தில் பாடப் புத்தகங்களை வெளியிடும்போது அரசு அதைக் கண்காணிக்கும். அதேசமயம், பாடப் புத்தகங்களில் இடம் பெற வேண்டிய அம்சங்களை புத்தகங்களை வெளியிடும் நிறுவனங்களே முடிவு செய்யும் சுதந்திரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...