•  

வறுமை, வேலையின்மையை விட காதலுக்காக தற்கொலை செய்பவர்களே அதிகம்!

Suicide
 
டெல்லி: இந்தியாவில் வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றை விட காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்பவர்களே அதிம் என்று தேசிய குற்றப்பதிவு ஆவணங்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

2008ம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த விபத்து மரணம் மற்றும் தற்கொலை பற்றிய தகவல் அறிக்கையை தேசிய குற்றப்பதிவு ஆவணங்கள் பிரிவு வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் குறைந்தபட்சமாக ஒருநாளைக்கு 10 பேர் காதல் தோல்வி காரணமாக மனமுடைந்து தங்கள் உயிரை இழக்கின்றனர்.

ஆனால் வறுமையின் காரணமாக தற்கொலை செய்து கொள்பவர்களின் விகிதம், ஒரு நாளைக்கு எட்டு என்ற அளவிலும், வேலையின்மை என்கிற காரணம் ஆறு என்ற அளவிலும் உள்ளது.

2008ம் ஆண்டில் இந்தியாவில், காதல் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 774.

ஆண்களால் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டவர்கள் ஆயிரத்து 912 பேர். தற்கொலை செய்து கொண்ட ஆண்களின் எண்ணிக்கை ஆயிரத்து 862.

காதல் தோல்வியால் தூண்டப்பட்டு அதிக தற்கொலைகள் நடந்த மாநிலங்கள் வரிசையில் தமிழகத்துக்கு இரண்டாமிடம். தமிழகத்தில் 2008ம் ஆண்டில் காதல் தோல்வி தற்கொலைகள் 549.

முதலிடத்தில் மேற்குவங்கம் (792). தமிழகத்தைத் தொடர்ந்து அசாம் (396), ஆந்திரா (263) மற்றும் ஒரிசா (212) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

அந்த ஆண்டில் வறுமையால் உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் மொத்தம் 3 ஆயிரத்து 6 பேர். வேலையின்மை மற்றும் திடீர் நிதி நெருக்கடி போன்ற காரணங்களால் தற்கொலை செய்து கொண்டவர்கள் முறையே 2 ஆயிரத்து 8 மற்றும் 2 ஆயிரத்து 970 பேர்.

எனினும், 2008ல் நிகழ்ந்த மொத்த தற்கொலைகள் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 17 என்ற எண்ணிக்கையில், குடும்ப வன்முறை மற்றும் நோய்வாய்பட்டு தற்கொலை செய்துகொண்டவர்கள் 45.7 சதவீதம் பேர்.

தற்கொலை செய்து கொண்டவர்களில் 34 சதவீதம் பேர் விஷத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தூக்கு போட்டு கொள்ளும் முறையை அதிகம் பேர் பயன்படுத்தியுள்ளனர்.

ஒட்டுமொத்த தற்கொலைகளில் 11.5 சதவீத சம்பவங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களில் நிகழ்ந்துள்ளன.




Story first published: Sunday, February 21, 2010, 15:00 [IST]

Get Notifications from Tamil Indiansutras